தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்தாண்டு 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் 9-ம் வகுப்புக்கு ஆண்டு இறுதித்தேர்வும், 10 மற்றும் 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
ஆனால் பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் திட்டமிட்டபடி மே-3ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2ஆம் அலையின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது, கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது அரசு சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அறிவித்து இருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக, அடுத்த மாதம் நடைபெற உள்ள பிளஸ்-2 பொதுத் தேர்வை திட்டமிட்டப்படி நடத்துவதா? அல்லது தேர்வை ஒத்திவைக்கலாமா?, தேர்வை நடத்துவது என்றால், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது? முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செய்ய வேண்டியவை எவை? என்பது குறித்து கல்வித்துறை சார்பில் கடந்த 2 தினங்களுக்கு முன் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமா என முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் முடிவு தெரியவரும் என்று தகவல் வெளியாகியுள்ளன. மேலும் திட்டமிட்டபடி பொதுத்தேர்வு நடைபெறுமா அல்லது பொதுத்தேர்வில் வேறு ஏதும் மாற்றங்கள் கொண்டுவரலாமா என இன்று நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்த ஆலோசனையில் அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9.5 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத்தவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.