கடந்த 40 ஆண்டில் உலகம் எப்படி எல்லாம் மாறியிருக்கிறது என்பதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலமாக கண்கூடாக பார்க்கக் கூடிய, ‘டைம் லாப்ஸ்’ வசதி, கூகுள் எர்த்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். ‘கூகுள் எர்த்’ என்ற இணையதள சேவையை கூகுள் நிறுவனம் கடந்த 2017ம் ஆண்டு தொடங்கியது. இதன் மூலம், புவியின் பல்வேறு பகுதிகளை 3டி வடிவில் செயற்கைக்கோள் புகைப்படங்களாக பார்க்க முடியும். இந்நிலையில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு கூகுள் எர்த்தில் கூகுள் நிறுவனம் மிகப்பெரிய மேம்பாட்டை (அப்டேட்) வழங்கி உள்ளது. அதாவது, கடந்த 37 ஆண்டுகளில் உலகம் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது என்பதை காட்டக் கூடிய, ’டைம் லாப்ஸ்’ என்ற புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டு கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கூறுகையில், ‘‘மனித வரலாற்றில் இல்லாத வகையில், கடந்த அரை நூற்றாண்டில் நமது பூமி மிக விரைவான சுற்றுச்சூழல் மாற்றத்தை கண்டுள்ளது. கூகுள் எர்த்தின் புதிய டைம் லாப்ஸ் அம்சத்தில் 2.4 கோடி செயற்கைக்கோள் புகைப்படங்கள் சேர்க்கப்பட்டு, கடந்த 37 ஆண்டுகளில் பூமியில் எவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை அறியும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதுவும், 4டி தொழில்நுட்பத்தில் இதை பார்க்கலாம்,’’ என்றார். இது மிகப்பெரிய அப்டேட் என கூறியுள்ள சுந்தர்பிச்சை, இதன் மூலம் புவிக்கோளத்தை புதிய பரிமாணத்தில் காண முடியும் என தெரிவித்துள்ளார்.