Tamil_News_large_2749816
சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஒப்பந்த அடிப்படையில், 600 நர்ஸ்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, மார்ச் முதல் பரவத் துவங்கியது. முதல் அலையை விட, இரண்டாவது அலை அதிவேகமாக பரவுகிறது. தினமும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.குறிப்பாக, சென்னையில் தொற்று பரவலின் வேகம் தீவிரமாக உள்ளது. இதனால், சிகிச்சை அளிக்கும் மருத்துவ மனைகளில், பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்காக, சென்னை அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற, மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் வாயிலாக, ஒப்பந்த அடிப்படையில், 600 நர்ஸ்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், கொரோனா தொற்று பரவ துவங்கிய பின், ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களில், பெரும்பாலானோர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். தற்போதும், கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், ஒப்பந்த அடிப்படையில், 600 நர்ஸ்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேவை ஏற்பட்டால், கூடுதல் நர்ஸ்கள், டாக்டர்கள் நியமிக்கப்படுவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.