'முதுநிலை ஆசிரியர் தேர்வு பட்டியலை, முழுமையாக மாற்றி வெளியிட வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:தமிழக அரசு பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான, போட்டி தேர்வுகள், 2019 செப்டம்பரில் நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு துவக்கத்தில், முடிவுகள் வெளியிடப்பட்டன.
மேல் முறையீடு
வேதியியல் ஆசிரியர்கள் நியமனத்தில், அதிக மதிப்பெண் பெற்று, பொதுப்பிரிவில் நியமிக்கப்பட வேண்டிய, மிகவும் பிற்பட்ட வகுப்பினர், பின்னடைவு பணியிடங்களில் நியமிக்கப்பட்டனர். அதனால், பின்னடைவு பணியிடங்களுக்கு தேர்வாக வேண்டிய, மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கு, அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இந்த அநீதியை எதிர்த்து, வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த, சென்னை உயர்நீதிமன்றம், பின்னடைவு பணியிடங்களுக்கு தேர்வான, எம்.பி.சி., மாணவர்களை, பொதுப்பிரிவுக்கு மாற்றிவிட்டு, பின்னடைவு பணியிடங்களில், தரவரிசையில் அடுத்த நிலையில் உள்ள, எம்.பி.சி., மாணவர்களை நியமிக்க ஆணையிட்டது. அதை ஏற்க மறுத்த ஆசிரியர் தேர்வு வாரியம், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதை விசாரித்த, சஞ்சய்கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நிலைப்பாட்டை, கடுமையாக விமர்சித்து நிராகரித்துள்ளது.இதற்கு காரணமான, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, வேதியியல் பாட முதுநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு பட்டியல் திருத்தி வெளியிடப்பட வேண்டும்.நடவடிக்கைஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறான முடிவால் பாதிக்கப்பட்ட, எம்.பி.சி., மாணவர்கள், 34 பேருக்கு, முதுநிலை ஆசிரியர் பணி வழங்க வேண்டும். அதேபோல, தமிழ், பொருளியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், உயிரி வேதியியல் பாடங்களுக்கான தேர்வு பட்டியலையும் திருத்தி அமைத்து, பாதிக்கப்பட்ட மிகவும் பிற்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியலின மாணவர்களுக்கு, முதுநிலை ஆசிரியர் பணி வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.