10 மற்றும் 12ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறுமென பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தனித்தேர்வர்களுக்கு தேர்வு எப்போது நடைபெறும் என கேள்வி எழுந்துள்ள நிலையில், அது தொடர்பாக தேர்வுத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
அதன்படி கொரோனா கட்டுக்குள் வந்த பிறகு பனிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தனித் தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு தேர்வர்களுக்கும் அதே நேரத்தில் நடத்தலாமா அல்லது பிறகு நடத்தலாமா என்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். தேர்வு தொடர்பாக தனித் தேர்வர்களுக்கு சந்தேகமிருந்தால் பள்ளிக் கல்வித் துறையின் 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறியுள்ளனர்.