கொரோனா பாதிப்பால் மாநிலங்கள் திணறும் நிலையில், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வை கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 9, 10, 11ம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 12ம் வகுப்பு ரிசல்ட் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இத்தேர்வு தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், பள்ளி பொதுத் தேர்வுகள், உயர் கல்வி நுழைவுத் தேர்வுகளை நடத்துவது குறித்து மத்தியக் கல்வி அமைச்சகம் பல்வேறு கட்டமாகத் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அனைத்து மாநிலக் கல்வித்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுடன் நடத்திய காணொலி வாயிலான ஆலோசனைக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
அப்போது, நோய்த் தொற்று குறைந்த பிறகே பொதுத் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று மாநிலங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் முழுமையாகத் தடுப்பூசி போட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்கள் சுமார் 300 பேர், ஆஃப்லைன் பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் மாற்று மதிப்பீட்டு முறையைக் கையாள வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்குக் கடிதம் எழுதியுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அதிகரித்துள்ள நிலையில், பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய கோரும் மனுவை 31ம் தேதி(நாளை) உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. இதற்கிடையே சிபிஎஸ்இ 12ம் வகுப்புத் தேர்வுகளை ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 26ம் தேதிக்குள் நடத்தவும், தேர்வு முடிவுகளை செப்டம்பர் மாதம் வெளியிடவும் முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இந்த கல்வியாண்டுக்கான 12ம் வகுப்பு தேர்வை கைவிடுவது தொடர்பான ஒரு பரிந்துரையும் மத்திய கல்வி அமைச்சகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறு கைவிடும்பட்சத்தில், 9, 10 மற்றும் 11ம் வகுப்புகளில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் புதிய மதிப்பெண் பட்டியலை தயாரித்து தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். ஆனால், சில மாநிலங்கள் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதுகுறித்து சிபிஎஸ்இ வட்டாரங்கள் கூறுகையில், ‘தற்போதைய சூழ்நிலையில் தேர்வுகளை நடத்துவது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. ‘# கேன்சல்போர்டு எக்ஸாம்ஸ்’ என்று டுவிட்டரில் ஹேஷ்டாக் உருவாக்கப்பட்டு தேர்வை ரத்து செய்வதற்கான கோரிக்கை அதிகரித்து வருகிறது. அதனால், ஜூன் முதல் வாரத்தில் கொரோனா நிலைமையை மதிப்பாய்வு செய்து, தேர்வு குறித்த முக்கிய முடிவுகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிடும். ஏற்கனவே, சிபிஎஸ்இ விருப்பத்தேர்வு ஏ மற்றும் பி வடிவத்திலான இரண்டு திட்டங்களை மாநில அரசுகளிடம் மத்திய கல்வி அமைச்சகம் பகிர்ந்து கொண்டது. மாநில அரசுகளும் தங்களது பரிந்துரையை வழங்கி உள்ளன. வரும் செவ்வாய்க்கிழமைக்குள் (ஜூன் 1) முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்று கூறின.