மத்திய, மாநில அரசு ஊழியர்களின் அரிசி குடும்ப அட்டைகளுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்க தடை கோரி அதிமுக வழக்கறிஞர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக திருச்செந்தூரைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் பா.ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் 2,07,87,950 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் கட்டமாக மே 15 முதல் ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தை மே 10ல் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மே 15 முதல் அனைத்து ரேசன் கடைகளிலும் தினமும் 200 குடும்ப அட்டைகள் வீதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு போன்றவற்றால் வாழ்வாதார பாதிப்பை சந்திந்தவர்களுக்கு பொருளாதார உதவி செய்யும் வகையில் நிதி வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால் மத்திய, மாநில அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பலரும் அரிசி குடும்ப அட்டைகள் வைத்துள்ளனர். இவர்களுக்கு ஊரடங்கு காலத்திலும் முழு சம்பளம் வழங்கப்படுகிறது.
ஊரடங்கால் அரசு ஊழியர்களுக்கு வருமான இழப்பு ஏற்படவில்லை. அரசு ஊழியர்களின் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பணத்தை ஆக்சிஜன் உற்பத்தியை பெருக்கவும், புதிய ஆக்சிஜன் உற்பத்தியை ஆலை அமைக்கவும், அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகப்படுத்தவும் பயன்படுத்தலாம்.
வாடகைக்கார், ஆட்டோ, மினி பஸ், ஆம்னி பஸ், தனியார் பஸ் ஓட்டுனர்கள், நடத்துனர்கள், நடைபாதை வியாபாரிகள், ஊரடங்கு உத்தரவால் தற்காலிகமாக மூடப்பட்ட வணிக வளாகங்கள், பெரிய கடைகள், சினிமா தியேட்டர்கள், தனியார் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், சிறு தொழிலக உரிமையாளர்கள், தொழிலாளிகள், கூலித் தொழிலாளிகள், தள்ளுவண்டி வியாரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தான் கரோனா ஊரடங்கால் உண்மையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தான் பொருளாதார உதவி தேவைப்படுகிறது. எனவே, மத்திய அரசு, மாநில அரசு ஊழியர்கள், அரசு சார்பு நிறுவனங்களின் பணிபுரிபவர்கள், ஓய்வூதியர்களின் அரிசு குடும்ப அட்டைகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க தடை விதித்தும், வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், கரோனா ஊரடங்கால் உண்மையில் வருவாய் இழப்பு ஏற்பட்டவர்களின் குடும்ப அட்டைகளுக்கும் ரூ.2 ஆயிரம், அதற்கு மேல் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விடுமுறை கால நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.