அனைத்து அரசு, தனியார் துறைகளிலும் தமிழருக்கே முன்னுரிமை என்ற நிலை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளது மட்டுமின்றி வாழ்த்தும் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளன பொதுச்செயலாளர் வி.துரைபாண்டியன்: சிதைந்துபோன தமிழகத்தை சீர்தூக்கி சிறப்பாக வழிநடத்திட முதல்வராக பதவியேற்கவிருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனம் தமிழக பிரிவின் சார்பாக வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள் கிறோம்.டிஎன்பிஎஸ்சி முதல் மின்சாரத்துறை வரை அனைத்து அரசு மற்றும் தனியார் துறைகளிலும் தமிழருக்கே முன்னுரிமை என்ற நிலை மீண்டும் தொடங்கிட வேண்டுகிறோம்.
தாங்கள் தேர்தல் பரப்புரையில் குறிப்பிட்டதை போன்று அனைத்து அரசு ஊழியர்களுக்கும் புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்திட வேண்டுமென்றும் அதனால் அரசுக்கு கூடுதல் செலவினம் இல்லை என்பதனையும் 2003ல் இருந்து சேர்ந்துள்ள கோடிக்கணக்கான தொகையை சுழல் நிதியாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதனை தங்களின் மேலான பார்வைக்கு கொண்டு வருகிறோம்.
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் (ஏஐடியூசி) பொதுசெயலாளர் தனசேகரன்: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கட்டணி தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்களின் பேராதரவுடன் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் அதிகாரத்தின் துணையோடும், பெரும் பண செல்வாக்கோடும் செயல்பட்ட மதவெறி, சுயநலக் கும்பலை அதிகாரத்தில் இருந்து வெளியேற்ற, உரிய காலத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைத்து, தமிழக மீட்புப் போராட்டத்தை தொடங்கிய திமுக தலைவர், அதில் மகத்தான வெற்றி கண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் (ஏஐடியூசி) வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்நாடு திருக்கோயில் நிர்வாக அதிகாரிகள் சங்க தலைவர் அருட்செல்வன்:நடந்து முடிந்த 2021ம் ஆண்டின் சட்டமன்ற தேர்தல் களத்தில் சூறாவளியாய் சுழன்று களம் கண்டு வெற்றி வாகை சூடிய, தமிழக மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் தனிப்பெரும் தலைவரும், தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு கோயில் நிர்வாக அதிகாரிகள் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறது.
கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க தலைவர் சீனிவாசன் : மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏகோபித்த நம்பிக்கை அடிப்படையில் பெருவாரியான ஆதரவினை பெற்று நல்லாட்சி பொறுப்பினை ஏற்று உள்ள புதிய அரசுக்கும், அமைச்சரவைக்கும் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் நல்வாழ்த்துகளையும், ஆதரவையும் தெரிவித்து கொள்கிறோம்.
மக்கள் தீர்ப்பை மதித்து மக்கள் ஆட்சியின் மாண்பை காத்திட மக்களின் எதிர்ப்புகளை நிறைவேற்றி தூய்மையான லஞ்ச, லாவண்யமற்ற திறமையான துரிதமாக செயல்படும் நல்லாட்சியை நடத்திடவும் கிராம நிர்வாக அலுவலர்களின் நலன்களை பேணி காத்திடவும், அதன் மூலம் தமிழக மக்களின் மலர்ச்சியும், வளர்ச்சியும் பெற்றிட மு.க.ஸ்டாலின் தலைமையில் பணிந்துள்ள அரசு தலையாய பணியாக செயல்படுத்திட வேண்டுமென்பதே எங்களது எதிர்பார்ப்பு.