மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு விவகாரத்தில் சட்டப்பேரவை கூடிய பிறகு முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (மே 25) செய்தியாளர்களைச் சந்தித்து, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது:
"பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிக்கத் தனியாகக் குழு அமைக்க முடிவு செய்துள்ளோம். தமிழகத்தில் நீட் எதிர்ப்பே நமது கொள்கை. உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தது போல எப்போதுமே நாம் நீட் தேர்வுக்கு எதிரானவர்கள்தான். கண்டிப்பாக நீட் தேர்வை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
நீட் தேர்வு விவகாரத்தில் சட்டப்பேரவை எப்போது கூடுகிறதோ அப்போது இதுகுறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உரிய முடிவு எடுக்கப்படும்.
12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளைப் பொறுத்தவரை வழக்கமான தேர்வு முறையே பின்பற்றப்படும். தேர்வு நேரக் குறைப்பு, விரிவான பதில் அளிப்பு ஆகியவை மாற்றப்படாது. இதையேதான் மத்திய அரசுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்பாலான பிற மாநிலங்களும் தெரிவித்துள்ளன. எனினும், தேர்வுகளைப் பாதுகாப்புடன் நடத்த வேண்டியது அரசின் பொறுப்பு.
பொதுத் தேர்வை 2 கட்டங்களாக நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முதல்வரிடம் கலந்து ஆலோசித்த பிறகு, இறுதி முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும்".
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.