10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி என்று மட்டும் குறிப்பிட்டு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்: பள்ளிக்கல்வித் துறை
10ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடவாரியாக மதிப்பெண் வழங்காமல் தேர்ச்சி என்று மட்டும் குறிப்பிட்டு மதிப்பெண் பட்டியல் வழங்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பேரிடரால் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்த பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை மேற்கொண்டது. 5 பாடங்களுக்கான மதிப்பெண்கள் தனித்தனியாக வழங்கப்படாமல் தேர்ச்சி என்று மட்டுமே மதிப்பெண் பட்டியலில் குறிப்பிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மற்றபடி மதிப்பெண் சான்றிதழில் மாணவரின் பெயர், பிறந்த தேதி, தாய், தந்தை பெயர், படித்த பள்ளியின் பெயர், பதிவு எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம் பெற உள்ளன.
இந்த வடிவில் மதிப்பெண் பட்டியலை வடிவமைத்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.