தனித் தேர்வர்களுக்கும் சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்தக் கூடாது என 1,152 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். கொரோனா 2வது அலையை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. ஆனால், தனித்தேர்வர்களும், கடந்த ஆண்டு குறைந்த மதிப்பெண் பெற்ற கம்பார்ட்மென்ட் பிரிவில் உள்ள மாணவர்களும் கட்டாயம் நேரில் தேர்வு எழுத வேண்டுமென சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதற்கு இந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், எந்த பள்ளியிலும் பதிவு செய்யாமல் தனியாக சிபிஎஸ்இ தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் மற்றும் கம்பார்ட்மென்ட் மாணவர்கள் 1,152 பேர் சார்பில் வக்கீல் அபிஷேக் சவுத்ரி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், ‘தற்போதைய கொரோனா சூழலில் எப்போது நேரடி தேர்வு நடத்தப்படும் என்பதை தீர்மானமாக கூற முடியாது. நாங்கள் தேர்வு எழுதாமல் எந்த பல்கலைக் கழகத்திலும், கல்லூரியிலும் சேர முடியாது. இது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21ன் கீழ் எங்களின் படிக்கும் அடிப்படை உரிமையை பறிக்கும் செயலாகும். எனவே, எங்களையும் பள்ளி மாணவர்களாக கணக்கில் கொண்டு, நேரடி தேர்வை ரத்து செய்ய வேண்டும். மதிப்பெண் வழங்க குறிப்பிட்ட நடைமுறையை கொண்டு வர அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.