+2 தேர்வு கிடையாது என்பது புதியக் கல்விக்கொள்கையை மறைமுகமாக அமல்படுத்த துடிக்கும் மத்திய அரசின் சூழ்ச்சியே. காலச் சூழல் சரியானதும் போதிய பாதுகாப்புடன் மாநில அரசு தேர்வினை நடத்த வேண்டும்
தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுகளை இரத்துச் செய்யாமல், +2 தேர்வு மட்டும் இரத்து என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பு மாணவர்களுக்கு எந்த நன்மையும் விளைவிக்கப் போவதில்லை. உயர்கல்வி, வேலை வாய்ப்புகளில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். தமிழ் நாடு அரசு, மாநில மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படாமல், நோய்த் தொற்று கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு எழுத்துப் பூர்வமான +2 பொதுத் தேர்வை ஒரு மாத முன் அறிவிப்போடு நடத்த வேண்டும். மாநில அரசுகளின் பாடத்திட்டங்களைப் பொறுத்தமட்டில், மேனிலைப் பள்ளித் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்களின் அடிப்படையில்தான், கல்லூரிச் சேர்க்கை நடைபெறுகின்றது, அயல்நாடுகளின் பள்ளி, கல்லூரிச் சேர்க்கைக்கும் அந்த மதிப்பெண்களே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. மத்திய அரசின் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ ஆகியவற்றில், பிளஸ் 2 தேர்வை நடத்துவது இல்லை என, பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்து இருக்கின்றார். மாணவர்களின் உடல்நலம், மனநலத்தைக் கணக்கில் கொண்டு, இந்த முடிவை எடுத்து இருப்பதாக விளக்கம் அளித்து இருக்கின்றார்.ஆனால், நீட் தேர்வு மற்றும் பிற போட்டித் தேர்வுகள் கிடையாது என அறிவிக்கவில்லை. அந்தத் தேர்வு எழுதுகின்ற அந்த மாணவர்களின் உடல் நலன் மனஅழுத்தங்களால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, இது ஒரு சூழ்ச்சித் திட்டமே ஆகும்.
காரணம், அவர்கள் ஏற்கனவே கொண்டு வந்து திணித்து இருக்கின்ற புதிய கல்விக்கொள்கையின்படி, கல்லூரிகளில் சேருவதற்கு, மேனிலைப்பள்ளித் தேர்வில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது தேசிய தேர்வு முகமை நடத்தும் திறன் அறித் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்களின் அடிப்படையில்தான் சேர்க்கை என்று கூறி இருக்கின்றார்கள். எனவே, இந்த ஆண்டு மட்டும் அல்ல, இனி எப்போதுமே பிளஸ் 2 தேர்வு நடத்த வேண்டிய தேவை இல்லை என்பதுதான் அவர்கள் திட்டம் ஆகும். வேலை வாய்ப்புகள் பெறுவதற்கும் +2 தேர்வே தகுதியாக இருக்கின்றது. மருத்துவக் கல்லூரிகளுக்கும் அந்த அடிப்படையில்தான் சேர்க்கை நடைபெற வேண்டும்; நீட் தேர்வு கூடாது என்பதுதான், தமிழ்நாட்டின் கருத்து ஆகும். எனவே, ஒன்றிய அரசின் சூழ்ச்சிக்கு அடிபணியாமல், தமிழ்நாட்டின் கல்வியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரின் கருத்துகளைக் கேட்டு, அதன்படி தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும். கரோனா தொற்றின் வேகம் குறைந்த பிறகு, ஒருமாத முன் அறிவிப்போடு, மேனிலைப் பள்ளித் தேர்வுகளை நடத்த வேண்டும். தமிழ்நாட்டில் வலுவான பள்ளிக் கல்வி கட்டமைப்பு உள்ளதால், மாணவர்கள் குழப்பம் அடையாமல், தங்களின் பயிற்சிகளைத் தொடருகின்ற வகையில், மேனிலைப் பள்ளித் தேர்வு நடக்கும் என்ற தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். அனைத்து அரசுப் பள்ளிகளையும் தேர்வு மையங்களாக அறிவித்து மாண்வர்களின் வீடுகளுக்கு அருகிலேயே தேர்வினை நடத்திடவேண்டும். கட்டுப்படுத்தப்பட பகுதிகள் இருந்தால் அங்கே போதிய பாதுகாப்பு வசதிகளுடன் தேர்வினை நடத்திடவேண்டும். நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பிறகு தனியாக தேர்வினை நடத்திடலாம்.மாணவர்கள் குழப்பம் அடையாமல் தங்களின் பயிற்சிகளை தொடரும் வகையில், தேதியை பின்னர் அறிவித்தாலும், தேர்வு நடக்கும் என்ற உறுதியான அறிவிப்பை தமிழ் நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.