பிளஸ் 2 தேர்வு பற்றி சட்டமன்ற கட்சிப் பிரதிநிதிகளுடன் இன்று ஆலோசனை நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துளளார். கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில் ஏற்கனவே சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வும் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்வது குறித்து அந்தந்த மாநிலங்கள் ஆலோசித்து முடிவெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என்று பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் தமிழக அரசு கருத்து கேட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று மாலை 4 மணிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடனும், பின் கல்வியாளர்களுடனும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பிளஸ் 2 தேர்வு பற்றி சட்டமன்ற கட்சிப் பிரதிநிதிகளுடன் இன்று காணொலியில் ஆலோசனை நடத்தப்படும். தேர்வு குறித்து மருத்துவ நிபுணர்கள், உளவியல் நிபுணர்களுடனும் ஆலோசிக்கப்பட உள்ளது. அனைத்து தரப்பு கருத்துகளின் அடிப்படையில் முதல்வர் உரிய முடிவை அறிவிப்பார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக மற்ற மாநிலங்கள் எடுக்கும் முடிவையும் கவனித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.