மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிலுவையை செப்டம்பர் மாதம் வழங்க மத்திய அரசு சம்மதித்து விட்டதாக மத்திய அரசு ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் சிவகோபால் மிஸ்ரா நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 26 மற்றும் 27-ந் தேதிகளில், டெல்லியில் வடக்கு பிளாக்கில் மந்திரிசபை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். 28 முக்கிய பிரச்சினைகள் பற்றி விவாதித்தோம்.
ஒன்றரை ஆண்டாக நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. அதில், நிறுத்தி வைக்கப்பட்ட 3 அகவிலைப்படி உயர்வையும், வருகிற ஜூலை மாதம் வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வையும் சேர்த்து மொத்தமாக செப்டம்பர் மாதம் வழங்க மந்திரிசபை செயலாளர் ஒப்புக்கொண்டார். இந்த முடிவு, மத்திய அரசு ஊழியர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.