கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு முதல் முறையாக அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டன. முழு கல்வியாண்டும் ஆன்லைன் வகுப்பு மூலமே நடைபெற்றது. கடந்த ஆண்டு செப்டம்பரில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் தொற்று அதிகமானதால் மீண்டும் மூடப்பட்டன.
இதனை தொடர்ந்து இரண்டாவது அலை வேறு வந்துவிட்டதால் பள்ளி, கல்லூரிகள் திறக்க சாத்தியமில்லாமல் போனது. தற்போது இந்தியா முழுவதுமே கொரோனா பரவல் குறைந்துவிட்டது. ஊரடங்கு பிறப்பித்த மாநிலங்கள் படிபடியாக தளர்வுகள் அறிவித்து வருகின்றன. ஊரடங்கை முழுவதுமாக வாபஸ் பெற்ற தெலங்கனா அரசு நாளை முதல் 50% மாணவர்களுடன் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க அனுமதி அளித்துள்ளது. ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.
தற்போது தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் இதுதொடர்பாக ஆலோசிக்கப் போவதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் பேட்டியளித்திருந்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்திருந்தார். இச்சூழலில் தான் முதலமைச்சர் ஸ்டாலின் வரும் ஜூலை 6ஆம் தேதி பள்ளிகள் திறப்பது தொடர்பாக தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த ஆலோசனைக்குப் பின் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. அநேகமாக ஆகஸ்ட்டில் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. பள்ளி, கல்லூரி திறப்பு குறித்து மருத்துவ நிபுணர்கள், மூன்றாம் அலை வந்தால் இளம் சிறார்களை அதிகம் தாக்க வாய்ப்பிருக்கிறது என்றும், ஆகவே மாணவர்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு திறக்க அனுமதிக்கலாம் எனவும் கூறுகின்றனர். ஸ்டாலின் என்ன முடிவு எடுக்க போகிறார் என ஜூலை மாதம் தெரியவரும்.
0 Comments:
Post a Comment