மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள நீட் தேர்வுக்கு தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி, ஆட்சிப்பொறுப்பை ஏற்றதும் நீட் தேர்வை ரத்து செய்வதற்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கி உள்ளார்.
நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது.
இந்நிலையில், நுழைவுத் தேர்வுகள் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அதில், தமிழகத்தில் நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார். தமிழகத்தில் நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் உகந்ததாக இருக்காது, மாநில கல்வித் திட்டத்தின் அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.