தமிழகத்தில், 'நீட்' தேர்வின் தாக்கம் குறித்து ஆராய, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவிடம், நீட் தேர்வு தொடர்பான கருத்துகளை, ஒவ்வொருவரும் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல், தபால் வாயிலாகவோ, neetimpact2021@gmail.com என்ற, மின்னஞ்சல் வாயிலாகவோ தெரிவிக்கலாம்.மேலும், கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்ககத்திலும், நேரடியாகவும் தங்களது கருத்துகளை சமர்ப்பிக்கலாம். நீட் தேர்வு குறித்து, பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க, இன்று கடைசி நாள். அதன்பின், அறிக்கை இறுதி செய்யப்பட்டு, அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நீட் பயிற்சி ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல் நிறுத்தம்
அரசின் 'நீட்' பயிற்சி ஒருங்கிணைப்பாளர் களுக்கு திடீரென வழிகாட்டுதல்கள் நிறுத்தப் பட்டு உள்ளதால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.தமிழக பாடத்திட்ட மாணவர்களுக்கு சரியான பயிற்சி கிடைக்காததால், நீட் தேர்வில் முன்னிலை பெற முடியவில்லை.இதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, பள்ளி கல்வி துறை சார்பில் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.இந்த பயிற்சி திட்டம், அ.தி.மு.க., ஆட்சியில் அறிமுகமானதால், தி.மு.க., ஆட்சியில் தொடர்வதா என ஆசிரியர்கள் குழப்பம் அடைந்தனர்.'நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துவோம்' என தி.மு.க., கூறி வருவதால், தி.மு.க., ஆட்சி அமைந்ததும், பயிற்சி அளிக்க உடனடியாக அனுமதி அளிக்கப்படவில்லை; தாமதமாக அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் நீட் இலவச பயிற்சி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கான வழிகாட்டுதல்கள், திடீரென நிறுத்தப்பட்டு உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். நீட் ஒருங்கிணைப்பாளர்களின் மாநில 'வாட்ஸ் ஆப்' குழுவில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுஉள்ளன.நீட் பயிற்சி குறித்து, ஒருங்கிணைப்பாளர்கள் தங்களின் கருத்துகளை பதிவிடும் வசதி ரத்து செய்யப்பட்டுள்ளது.அதனால் நீட் பயிற்சியின் அடுத்தடுத்த வகுப்புகள் குறித்த வழிகாட்டுதல் பெற முடியாமல், ஆசிரியர்களும், ஒருங்கிணைப்பாளர்களும் தவித்து வருகின்றனர்.இந்த நெருக்கடியான நிலையில், பயிற்சியை தொடர்வதா, நிறுத்துவதா என ஆசிரியர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.