இந்திய ரிசர்வ் வங்கி வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் NACH விதிகளை மாற்றியுள்ளது. இதன் மூலம் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் வார இறுதி நாட்களில் கூட சம்பளம் மற்றும் ஓய்வூதியம் போன்ற சேவைகளை செயல்படுத்த முடியும்.
புதிய விதி
RBI ன் புதிய அறிவிப்பின் படி, சம்பளம், ஓய்வூதிய பரிமாற்றம் மற்றும் EMI பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வங்கி செயல்படும் நாட்களை நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியதில்லை. இந்த சேவைகளை வங்கி வாடிக்கையாளர்கள் இனி வார இறுதி நாட்களிலும் செயல்படுத்திக்கொள்ள முடியும். அதாவது ரிசர்வ் வங்கி, தற்போது தேசிய தானியங்கி தீர்வு (NACH) விதிகளை மாற்றியுள்ளது. அந்த அடிப்படையில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் வங்கி செயல்படாத நாட்களிலும், மேலே குறிப்பிடப்பட்ட சேவைகளை வாடிக்கையாளர்கள் எவ்வித இடையூறுகளும் இல்லாமல் பெற்றுக்கொள்ள முடியும். இந்த புதிய விதிமுறைகள் மூலம் பணம் செலுத்துவதை எளிதாக்கி, வாடிக்கையார்கள் வாரத்தின் ஏழு நாட்களிலும் சேவைகளை மேற்கொள்ள முடியும். இதன் காரணமாக, வங்கிகள் செயல்படும் வார நாட்களில் கொடுக்கப்பட்டுள்ள சம்பளம் மற்றும் ஓய்வூதியம் போன்ற கொடுப்பனவுகளை வார இறுதிகளில் செயல்படுத்த முடியும். பொதுவாக, ஒரு சில நேரங்களில் மாதத்தின் முதல் நாள் ஒரு வார இறுதியாக அமைவதால் அடுத்த வேலை நாளுக்கு சம்பளம் தாமதமாகி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இதனால் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ், ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் RTGS மற்றும் NACH சேவைகள் வாரத்தின் 7 நாட்களும் கிடைப்பதாக அறிவித்தார். இந்த NACH சேவைகள் மூலம் வட்டி, சம்பளம், ஓய்வூதியம், மின்சாரம், எரிவாயு, மற்றும் பணம் செலுத்துதல் போன்ற கடன் பரிமாற்றங்களையும் பெற்றுக்கொள்ள முடியும். தவிர தொலைபேசி, நீர், கடன்களுக்கான குறிப்பிட்ட தவணைகள், நிதி முதலீடு, காப்பீட்டு பிரீமியம் போன்றவைகளை செலுத்துவதற்கும் இச்சேவைகள் உதவுகிறது.