தமிழகத்தில் குடும்பத் தலைவிக்கு ரேஷன் கடைகள் மூலம் மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று முக ஸ்டாலின் அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து இருந்தார். ஆனால் இது குறித்து தற்போது வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
குடும்பத் தலைவிக்கு 1000 ரூபாய்: தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் முக ஸ்டாலின் அவர்கள் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவை நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தார். அதில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், ஆவின் பால் விலை குறைப்பு, கொரோனா நிவாரணத்தொகை, வேலைவாய்ப்பு, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை போன்ற வாக்குறுதிகள் முக்கிய அம்சங்களாக இருந்தது. இந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்தது. இதனை தொடர்ந்து முக ஸ்டாலின் பதவியேற்றவுடன் 5 திட்டங்களில் கையெழுத்திட்டு அரசாணை வெளியிட்டார். அதில் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்பது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இந்த நிலையில் குடும்ப அட்டையில் குடும்ப தலைவியின் புகைப்படம் இருந்ததால் தான் 1000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கும் என்ற வதந்தி பரவி வருகிறது. இதனால் ஏராளமான பெண்கள் மாவட்டங்களில் உள்ள உணவு வழங்கல் துறைக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். மேலும் ரேஷன் கடைகளில் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் எப்போது வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்து வருகிறது.
இது குறித்து விளக்கமளித்த உணவு வழங்கல் துறை அமைச்சர், ரேஷன் கடைகள் மூலம் பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் கட்டாயம் செயல்படுத்தப்படும். இதற்கான தேவையான முன்னேற்பாடுகளை செய்தவுடன் முதல்வர் அறிவிப்பார். அதுவரை பெண்கள் காத்திருக்க வேண்டும் என கூறி உள்ளார்