திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் நேற்று ஆய்வு செய்தார்.
ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கடந்த காலத்தில் ஆட்சியாளர்கள் உரிய நேரத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை. திமுக நீதிமன்றத்தை நாடியதால் ஒருசில இடங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. வரும் செப்டம்பர் 15-க்குள் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் மீதமுள்ள பகுதிகளில் செப்டம்பர் 15-க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசும், ஊரக வளர்ச்சித் துறையும் பணிகளை தொடங்கிவிட்டன.
குறிப்பிட்ட காலத்துக்குள் தொகுதி மறுவரை செய்யப்பட்டாலும், செய்யப்படாவிட்டாலும் நீதிமன்றம் கூறியுள்ள தேதிக்குள் தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதற்கான தகுந்த ஏற்பாடுகளை அரசும், உள்ளாட்சித் துறையும் செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.