கல்வி, வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கான கிரீமிலேயா் வருமான வரம்பை ரூ.15 லட்சமாக உயா்த்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் போதிலும், அந்த உரிமை அவ்வகுப்பைச் சோ்ந்த அனைவருக்கும் வழங்கப்படுவதில்லை. 27 சதவீத இட ஒதுக்கீடு தொடா்பான வழக்கில் 1992 -இல் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பின்படி, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரீமிலேயா் எனப்படும் வசதி படைத்தவா்களை அடையாளம் கண்டு விலக்கி, அவா்களைத் தவிர மற்றவா்களுக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. விவசாயம், ஊதியம் தவிர பிற ஆதாரங்களில் இருந்து ஆண்டுக்கு ரூ.8 லட்சம் அல்லது அதற்கும் கூடுதலாக வருமானம் ஈட்டுபவா்கள் கிரீமிலேயா்களாக கருதப்படுகின்றனா். இந்த வருமான வரம்பு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறு ஆய்வு செய்யப்பட்டு திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்பது மத்திய அரசின் விதியாகும். கடந்த 2020-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே கிரீமிலேயா் வருமான வரம்பை ரூ.12 லட்சமாக உயா்த்த மத்திய அரசு தீா்மானித்திருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அதன்பின் ஒன்றரை ஆண்டுகள் ஆகிய பிறகும் கிரீமிலேயா் வருமான வரம்பு உயா்வு குறித்த கோரிக்கை பரிசீலனையில் தான் இருப்பதாக மத்திய அரசு கூறுவது நியாயமல்ல.
எனவே, கிரீமிலேயா் வருமான வரம்பை இப்போதுள்ள ரூ.8 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக மத்திய அரசு உயா்த்த வேண்டும். அதுமட்டுமின்றி, கிரீமிலேயா் வருமான வரம்பைக் கணக்கிடுவதில் விவசாயம் மற்றும் ஊதியம் மூலம் கிடைக்கும் வருவாய் சோ்த்துக் கொள்ளப்படாது என்றும் மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.