அதிக பெண் ஆசிரியர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு 2-ம் இடம்: UDISE+ ஆய்வறிக்கை பகுதி-1 - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, July 22, 2021

அதிக பெண் ஆசிரியர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு 2-ம் இடம்: UDISE+ ஆய்வறிக்கை பகுதி-1


  மத்திய அரசு வெளியிட்ட 'கல்வி ப்ளஸ் ஒருங்கிணைந்த தகவல் முறை' (UDISE+) 2019-20 ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் மொத்தம் 15 லட்சம் பள்ளிகளில் 26.4 கோடி மாணவ, மாணவியர்கள் உள்ளனர். இதில் இந்திய அளவில் மாணவ சேர்க்கைக்கான மொத்தப் பதிவு விகித குறியீடு (Gross Enrolment Ratio) தொடக்கப் பள்ளி அளவில் 102.7% என்றும்; நடுநிலைப் பள்ளிகளைப் பொறுத்தவரை 89.7% என்றும் உள்ளது. இதுவே தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், தொடக்கப் பள்ளிகளில் 98.9% என்றும், நடுநிலைப் பள்ளிகளில் 96.5% என்றும் உள்ளது.



மொத்த மாணவ, மாணவியர் எண்ணிக்கைக்கும், மொத்த பதிவு விகிதத்துக்கும் நெருங்கிய தொடர்பொன்று உள்ளது. அதாவது, மொத்த பதிவு விகிதமென்பது (GER) பள்ளிப் படிப்பில் இருந்து ஒருநிலையிலிருந்து, அடுத்த நிலைக்கு செல்லும் மாணவர்களின் ஒட்டுமொத்த விகிதத்தை குறிக்கும். இது குறையும்போது மொத்த மாணவ, மாணவியர் எண்ணிக்கையில் குறைவுகள் ஏற்படும். அந்த வகையில் இது இரண்டுக்கும் உண்டான இடைவெளியை வைத்து, அடுத்தடுத்த நிலைக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கையானது எந்தளவுக்கு குறைகிறது என்பதை நாம் அறியலாம். எந்தளவுக்கு இந்த விகிதம் அதிகரிக்கிறதோ, அந்தளவுக்கு குழந்தைகள் மத்தியில் நாம் கல்வியறிவை அதிகரிக்கிறோம் என அர்த்தம்.



இந்த GER-ல், தமிழகத்தில் கடந்த 2019-20-ம் ஆண்டில் தொடக்கப் பள்ளியில் சேரும் 98.6 விகித மாணவர்கள் - 99.3 விகித மாணவிகள் தங்களின் அடுத்த நிலையான நடுநிலை கல்விக்கு சென்றுள்ளது தெரியவந்துள்ளது. ஆனால், மேல்நிலைப் பள்ளிகளில் சேரும் மாணவர்களில் 66.3 சதவிகிதம் பேரும், மாணவிகளில் 80.6 சதவிகிதம் பேர் மட்டுமே தங்களின் அடுத்தகட்ட உயர் கல்விக்கு செல்கின்றனர். அதாவது, மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவர்களில் சிலர், தங்களின் உயர்க்கல்வி படிப்புகளுக்கு செல்வது தமிழகத்தில் குறைவாக குறைகிறது. இதனால் 12-ம் வகுப்புக்கு பிறகான படிப்பே கேள்விக்குறியாகிறது.



உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்களின் மேல்நிலைப் படிப்புக்கு செல்வது குறைவதன்மூலம், தமிழ்நாட்டின் இடைநிற்றல் விகிதமும் அதிகரிக்கிறது என்பதை நம்மால் உணரமுடிகிறது. அதாவது, 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளது. இவர்கள் 9,10 ம் வகுப்போடு தங்களின் பள்ளிக்கனவையே இழக்கின்றனர். 2019-20-ல் தமிழ்நாட்டின் மொத்த உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 9.6 ஆக உள்ளது. 



இதை இந்திய அளவில் பார்த்தால், இந்தியாவில் உயர்நிலைப் பள்ளி வகுப்புகளின் இடைநிற்றல் விகிதமானது 16 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் இது 2.6 சதவிகிதமும்; 1 முதல் 5 வரையிலான ஆரம்பப் பள்ளிகளில் 1.5 சதவிகிதமும் உள்ளது. அதாவது, 10-ம் வகுப்புக்குப் பின் பல மாணவர்கள் 11, 12 வகுப்புக்கு செல்வதில்லை; அல்லது பலர் 10-ம் வகுப்பை முடிப்பதேயில்லை.



இதேபோல் தமிழ்நாட்டில் ஆரம்பப் பள்ளிகளில், மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 1.4 சதவிகிதமாகவும், மாணவிகளில் இடைநிற்றல் விகிதம் 0.8 சதவிகிதமாகவும் உள்ளது. இதுவே உயர்நிலைப் பள்ளிகளில் மாணவிகளை விட மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் அதிகமாக இருந்துள்ளது. மாணவிகளின் இடைநிற்றல் 5.6% ஆகவும், மாணவர்களின் இடைநிற்றல் 13.4% ஆகவும் இருந்துள்ளனர். 



இப்படி பல மாணவ, மாணவியர் இடைநிற்றலுக்கு உள்ளாவதால், குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிகை அதிகரித்து வருகிறது. 2020-ம் ஆண்டு கணக்கின்படி இந்தியாவில் 3.3 கோடி குழந்தை தொழிலாளர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் அதிக எண்ணிகையில் குழந்தை தொழிலாளர்கள் இருக்கும் மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் இடைநிற்றல் விகிதமானது 14.4 சதவிகிதமாக உள்ளது. அதேபோல், பீகாரில் 21.4 சதவிகிதம் இடைநிற்றல் விகிதம் உள்ளது. இந்தியாவிலேயே உத்தரப் பிரதேசத்தில்தான் அதிக பள்ளிகளும் அதிக மாணவர் சேர்க்கையும் உள்ளதென்பது இங்கே கவனிக்கத்தக்கது. வேதனை என்னவென்றால், அங்கும் இடைநிற்றலுக்கு உள்ளாகும் மாணவ மாணவியரும் அதிகம்.


அருணாச்சலப் பிரதேசம், அசாம், போன்ற மாநிலங்களில் இடைநிற்றல் விகிதம் 30%-க்கும் அதிகமாக உள்ளன. குஜராத், திரிபுரா, சிக்கிம், நாகாலாந்து, மேகாலயா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தியாவின் விகிதத்தை விட அதிகமான இடைநிற்றல் விகிதத்தை பெற்றுள்ளன. இந்தியாவிலேயே மிகக் குறைந்த அளவில் இடைநிற்றல் காணப்படும் மாநிலம் பஞ்சாப். பஞ்சாபின் இடைநிற்றல் விகிதம் 1.5% மட்டுமே. 



கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிகையும், இடைநிற்றல் விகிதமும் மேலும் அதிகரித்து வருவதாக கல்வியலாளர்கள் கூறுகின்றனர். 



ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் இடைநிற்றல் விகிதத்தை எடுத்துக்கொண்டால், மாணவர்களை விட மாணவிகளின் இடைநிற்றல் விகிதமானது 2% குறைவாக உள்ளது. 



இடைநிற்றலுக்கான மற்றுமொரு காரணமாக, உயர்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெறுவோர் எண்ணிக்கை குறைவும் அமைகிறது. அதாவது, இந்தியாவில் உயர்நிலைப் பள்ளிகளில் 81.1 சதவிகித மாணவ, மாணவிகள் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர். இதில் 80.1% மாணவர்களும், 82.3% மாணவிகளும் அடங்குவர். தமிழகத்தில் 90.5% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறுகின்றனர். இதில் 94.4% பேர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.



மாணவர்களைப் பொறுத்தவரை, நடுநிலைப் பள்ளிகளில் 99.6% பேர் தேர்ச்சி பெறுகின்றனர். ஆனால், உயர்நிலைப் பள்ளி மாணவர்களில் 86.7% பேர் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர். அசாம், பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் உயர்நிலைப் பள்ளிகளில், மாணவிகளை விட மாணவர்களே அதிகம் தேர்ச்சி பெறுகின்றனர்.



இப்படியாக ஒரு வகுப்பில் தேர்வில் தோல்வி பெறும்போது, அவர்கள் இடையிலேயே பள்ளிப்படிப்பை மொத்தமாக முடித்துக்கொள்கின்றனர். இதுபோன்ற சூழலை தடுக்கவே தமிழகத்தில் 8ம் ஆண்டு வரை கட்டாய தேர்ச்சி உள்ளதென்பது நினைவுகூறத்தக்கது.



இந்தியாவில் உயர்நிலைப் பள்ளிகளில் அதிகம் தேர்ச்சி பெறுபவர்களின் பட்டியலில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் பஞ்சாப் (97.9), இரண்டாவது இடத்தில் கேரளா (92.0), நான்காவது இடத்தில் மணிப்பூர் (90.1) உள்ளது. புதுச்சேரி 89.9 சதவிகிதத்துடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இக்காரணத்தினால், இங்கெல்லாம் இடைநிற்றலுக்கு உள்ளாகும் மாணவ, மாணவியர் பிற மாநிலங்களைவிட கொஞ்சம் குறைவாக உள்ளது. 



இந்தியாவில் 10-ம் வகுப்பு பள்ளி மாணவ, மாணவியர்களின் தேர்ச்சி பெறாதவர்களின் விகிதமானது மொத்தமாக 2.8 சதவீதமாக உள்ளது. இதில், 2.9 சதவிகிதம் பெண்களும், 2.7 சதவிகிதம் ஆண்களும் அடங்குவர். இந்திய மாநிலங்களில், குறிப்பாக, டெல்லி, நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா, ஆகிய மாநிலங்களில் தேர்ச்சி பெறாதவர்களின் விகிதமானது அதிகமாகவே உள்ளது. ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தேர்ச்சி பெறாதவர்களின் விகிதம் 0 சதவிகிதமாக உள்ளது.



இருப்பினும் பல மாநிலங்களில் குறிப்பாக (தேர்ச்சி பெறாதோர் 0% என்றிருக்கும் தமிழ்நாட்டு உட்பட) நடப்பாண்டில் தேர்ச்சி அடைந்தாலும், அடுத்த நிலை கல்விக்கு செல்பவர்களின் எண்ணிக்கையானது மிகவும் குறைவாகவே உள்ளது. தமிழ்நாட்டில், 14.15 சதவிகிதம் பேர் உயர்நிலைப் படிப்பிற்குப் பின், மேல்நிலைக் கல்விக்கு செல்வதில்லை என தெரியவந்துள்ளது. இதை இந்திய அளவில் பார்க்கும்போது, தொடக்கப் பள்ளியிலிருந்து நடுநிலைப் பள்ளிக்கு 92.80%, நடுநிலைப் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளிக்கு 91.4% பேர் சென்றாலும், உயர்நிலைப் பள்ளியை முடித்துவிட்டு மேல்நிலைப் பள்ளிக்கு சென்றவர்களின் எண்ணிகையானது 71.60 சதவிகிதமாக உள்ளது. இந்தளவுக்கு இடைநிற்றல் மாணவ மாணவியர் அதிகரிப்பதன் பின்னணியில் வேலைவாய்ப்பின்மையால் குடும்பத்தில் நிலவும் வறுமை உட்பட வெவ்வேறு குடும்ப சூழ்நிலை போன்றவை உள்ளது. 10-ம் வகுப்பு முடித்தவுடன் பலர் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளராக சென்று விடுகின்றனர்.



இப்படி இடைநிற்றல் அதிகமாவதால், குழந்தைத் தொழிலாளர்கள் அதிகமாவதை போல குழந்தைத் திருமணங்களும் அதிகளவில் நடைபெறுகின்றன. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 15 லட்சம் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக யுனிசெஃப் கூறுகிறது. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் திருமணம் செய்துகொள்ளும் 4 பேரில் ஒருவருக்கு குழந்தை திருமணம் நடைபெறுவதாக தெரியவந்துள்ளது.



இது ஒருபுறம் இருக்க, ஒவ்வொரு ஆண்டும் கல்வியின் தரம், கல்விக் கட்டணம், மற்ற வசதிகளை எதிர்ப்பார்த்து பள்ளிகளை மாற்றம் செய்துவருபர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. அதாவது, எட்டாம் வகுப்பு வரை ஒரு பள்ளியிலும், 9 மற்றும் 10 வகுப்பு ஒரு பள்ளியிலும், 11 மற்றும் 12-ம் வகுப்புக்கு ஒரு பள்ளியும் என மாற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பள்ளிகளில் தக்க வைப்பு விகிதமானது குறைந்துக் கொண்டே செல்கிறது.



இந்தியாவில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படித்தவர்கள் 87% பேர் அதே பள்ளியில் கல்வியை தொடர்ந்து வருகின்றனர். ஆனால், மேல்நிலைப் பள்ளி படிப்புக்காக 40.2 சதவிகிதம் பேர் மட்டுமே கல்வியை தொடர்கின்றனர். உயர்நிலைப் பள்ளிகளில் 1-ம் வகுப்பில் சேரும் 100 மாணவர்களில் 82 பேர் மட்டும்தான் அதே பள்ளியில் 10-ம் வகுப்பை முடிக்கிறார்கள். அதேபோல், மேல்நிலைப் பள்ளிகளில், 100 பேர் சேர்ந்தால் அதில் 68 பேர் மட்டுமே 12-ம் வகுப்பு வரை கல்வியை தொடர்வதாக தெரியவந்துள்ளது.



தமிழ்நாட்டில் 94.8% பேர் 1 முதல் 5-ம் வகுப்பு வரை அதே பள்ளியில் கல்வியை தொடர்ந்து வந்தாலும், மேல்நிலைப் பள்ளி படிப்புக்காக 68.1% பேர் மட்டுமே அதே பள்ளியை தேர்வு செய்கின்றனர். இந்தியாவில் சண்டிகர், கேரளா ஆகிய 2 மாநிலங்களில் மட்டுமே 100% தக்கவைப்பு விகிதமானது காணப்படுகிறது. இதனால் சிக்கல் ஏதும் உருவாவதில்லை என்பதால், இது கவலைக்கொள்ள வேண்டாத தரவாகவே இருக்கிறது.



இங்கு நாம் கவலை கொள்ள வேண்டியது, இடைநிற்றலுக்கு உள்ளாகும் மாணவர்களைப் பற்றிதான். கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை சரிசெய்ய, பெற்றோர் தங்களின் பிள்ளைகளை இடைநிற்றலுக்கு உள்ளாக்காமல், அரசுப் பள்ளியில் சேர்க்கத் தொடங்க வேண்டும் என்கின்றனர் கல்வியலாளர்கள். தமிழகத்தில் இதுபற்றிய விழிப்புணர்வு பெருமளவில் இருக்கிறதென்பதே இப்போதைக்கு நமக்கு இருக்கும் ஒரே ஆறுதல்.



அந்தவகையில் சென்னை உட்பட தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில், பலர் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதை கண்கூடாக பார்க்கமுடிகிறது. முறையான கட்டமைப்பு வசதிகளும், தரமான கல்வியையும் கொடுத்து அரசுப் பள்ளிகள் இனிவரும் காலத்தில் மாணவர்களை தக்க வைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்பட்சத்தில் இடைநிற்றல் விகிதமென்பது பெருமளவில் குறையும். இல்லாதபட்சத்தில், இடைநிற்றல் அதிகரிக்கலாம். இந்திய அளவிலும் அரசு பள்ளி சார்ந்த விழிப்புணர்வும், இடைநிற்றலால் ஏற்படும் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வும் அரசு சார்பில் மக்கள் மத்தியில் அளிக்கப்பட வேண்டியது அவசியப்படுகிறது.



குழந்தைத் திருமணங்கள், குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பை தடுக்க, மாணவ, மாணவியரின் இடைநிற்றல் விகிதத்தை சரிசெய்தாலே போதும்.

இந்தக் கட்டுரையில், இந்தியா மற்றும் தமிழகத்தின் GER குறியீடு, மாணவர்களின் தேர்ச்சி விகிதம், தேர்ச்சிபெறாதோர் விகிதம், இடைநிற்றல் விகிதம், தக்கவைப்பு வீதம் போன்றவற்றை தெரிந்து கொண்டோம். அடுத்தக் கட்டுரையில், இந்தியா மற்றும் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் குடிநீர் வசதி, குடிநீருக்கான முக்கிய ஆதாரங்கள், ஆண்கள் - பெண்கள் கழிவறை வசதி, கைகழுவும் வசதி, மருத்துவ பரிசோதனை நடத்திய பள்ளிகள், சிறப்பு குழந்தைகளுக்கான படிகட்டுகளில் கைபிடிக்கும் கம்புகள் (handrails) மற்றும் வளைவுகளை (ramps) கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கை போன்றவற்றைக் குறித்து விரிவாக அலசுவோம்.


Post Top Ad