தமிழ்நாட்டில் 1-ஆம் வகுப்பில் 94.8% மாணவர்கள் சேருவதாகவும், ஆனால் 68.1% மாணவர்களே 12ஆம் வகுப்பை முடிப்பதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் ஒவ்வோர் கல்வியாண்டிலும், பள்ளிகளில் எத்தனை மாணவர்கள் புதிதாக சேருகின்றனர், எத்தனை மாணவர்கள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிடுகின்றனர் என்பது குறித்த புள்ளிவிவரங்களை UDISE மூலம் மத்திய அரசு வெளியிட்டு வருகிறது.
அதன் படி, கடந்த 2019-2020-ஆம் கல்வியாண்டுக்கான UDISE தரவுகள் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. இதில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1-ஆம் வகுப்பில் 95 மாணவர்கள் சேர்ந்தால், அதில் இருந்து 68 மாணவர்களே 12-ஆம் வகுப்புக்கு செல்வதாகவும், 32% மாணவர்கள் இடைநின்று விடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் 1-ஆம் வகுப்பில் 94. 8% பேர் சேரும் போது, 6-ஆம் வகுப்பில் இது 86.3% ஆகவும், 9-ஆம் வகுப்பில் இது 82.6% ஆகவும், 11-ஆம் வகுப்பில் 68.1% ஆகவும் குறைந்துவிடுவதாக UDISE தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக, பொருளாதார காரணங்கள், 8-ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் முறையில் தேர்ச்சி பெறும் மாணவர்களால் 9-ஆம் வகுப்பில் தேர்வை எதிர்கொள்வதில் சிரமம், தினக்கூலிக்கு செல்லும் குழந்தைத் தொழிலாளர்கள் போன்ற காரணிகளால் மேல்நிலை வகுப்புகளை முடிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாக சரிந்திருப்பதாக UDISE தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊரடங்குக்கு பின் பள்ளிகள் திறக்கப்படும் போது இடைநின்ற மாணவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.