தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை காரணமாக நடப்பு ஆண்டில் இதுவரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து கொரோனா பரவல் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. கொரோனா குறைந்ததையடுத்து மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 95 சதவீதம் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல தயாராக இருப்பதாக தன்னார்வ நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் மெட்ரிக் பள்ளிகளில் 7 சதவீதம் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது, ஆனால் அரசு பள்ளிகளில் 5 சதவீதம் அதிகரித்துள்ளது. 2 ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் 2.96 சதவீதம் மாணவர்கள் தற்காலிக குழந்தை தொழிலாளர்களாக மாறியுள்ளனர்.
பள்ளிகளில் சத்துணவு வழங்கப்படாததால் 38 சதவீதம் மாணவர்கள் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் ஆன்லைன் வகுப்புகளில் 45 சதவீதம் மாணவர்கள் பற்கேற்பதாகவும், அரசின் கல்வித் தொலைக்காட்சியில் 41 சதவீதம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
கொரோனாவால் பள்ளி செல்ல முடியாதாது வருத்தம் அளிப்பதாக 82 சதவீதம் மாணவர்கள் தெரிவித்திருந்த நிலையில், பள்ளிகள் திறந்தால் பள்ளிகளுக்கு செல்ல 95 சதவீதம் மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.