நீட் தேர்வு புதிய வினாத்தாள் முறை மற்றும் அதற்கு விடையளிப்பது குறித்து லிம்ரா நிறுவனத்தின் இயக்குநர் முகமது கனிவிளக்கம் அளித்துள்ளார்.
நீட் தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. முந்தைய ஆண்டுகளில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடப் பிரிவுகளில் மொத்தம் 180 கேள்விகள் இருக்கும். இந்த ஆண்டு தேர்வில் 200 கேள்விகள் கொடுக்கப்படும். அதில் 180 கேள்விகளுக்கு பதில் அளித்தால் போதும்.
இந்த புதிய நடைமுறை குறித்து, சென்னையில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளித்துவரும் லிம்ரா நிறுவனத்தின் இயக்குநரும், கல்வியாளருமான முகமது கனி கூறியதாவது:
இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய ஒவ்வொரு பாடப் பிரிவிலும் ‘ஏ’, ‘பி’ என 2 பிரிவுகள் இருக்கும். ‘ஏ’ பிரிவில் 35 கேள்விகள் இடம்பெறும். இவை அனைத்துக்கும் கட்டாயம் விடையளிக்க வேண்டும். ‘பி’ பிரிவில் 15 கேள்விகள் இருக்கும். அதில் 10 கேள்விகளுக்கு பதில் அளித்தால் போதும்.
வினாத்தாள் தமிழிலும் தரப்படும். ஆங்கிலத்திலும் வினாக்கள்இருக்கும். தமிழ் வினாத்தாள்பெற விரும்புவோர், ஆன்லைனில்விண்ணப்பிக்கும்போது தவறாமல்அதை குறிப்பிட வேண்டும். தமிழகத்தில் 18 நகரங்களில் மையங்கள் அமைக்கப்படுகின்றன.
கரோனா சூழல் காரணமாக நீட் தேர்வுக்கு நேரடி பயிற்சி அளிக்க இயலவில்லை. ஆன்லைன் வழியாக பயிற்சி அளித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.