எம்.பில்., படிப்பை நடத்துவதா; வேண்டாமா? ; அரசின் உத்தரவால் பல்கலைகள் குழப்பம்! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, July 3, 2021

எம்.பில்., படிப்பை நடத்துவதா; வேண்டாமா? ; அரசின் உத்தரவால் பல்கலைகள் குழப்பம்!



சென்னை : தமிழக அரசின் மாறுபட்ட அறிவிப்பு மற்றும் புதிய கல்வி கொள்கை மீதான எதிர்ப்பால், எம்.பில்., படிப்பை நடத்துவதா, வேண்டாமா என, பல்கலைகள் குழப்பம் அடைந்துள்ளன. படிப்பை நடத்தினால், தமிழக பல்கலைகளுக்கு மத்திய அரசின் நிதியுதவி பாதிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

முதுநிலை பட்டதாரிகளுக்கான, எம்.பில்., படிப்புக்கு வேலைவாய்ப்புகள் குறைந்து விட்டதால், புதிய கல்வி கொள்கைப்படி, எம்.பில்., படிப்புக்கு, நடப்பு கல்வி ஆண்டு முதல், மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டாம் என, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானிய குழு, உயர்கல்வி நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. இதைப் பின்பற்றி பல மாநிலங்கள், எம்.பில்., படிப்பை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.

ஆலோசனை

தமிழகத்தில், சென்னை பல்கலையில் நடந்த, உயர் கல்வித்துறை செயலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்ற சிண்டிகேட் கூட்டத்திலும், எம்.பில்., மாணவர் சேர்க்கையை நிறுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது. இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில், எம்.பில்., படிப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

தமிழக அரசு, புதிய கல்வி கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதால், தமிழகத்தில் எம்.பில்., படிப்பை நிறுத்தினால், புதிய கல்வி கொள்கையை ஏற்று கொண்டதாகி விடும் என, அதிகாரிகள் மத்தியில் கருத்துகள் பரிமாறப்பட்டன. இதையடுத்து, 'எம்.பில்., படிப்பு நிறுத்தப்படாது; சென்னை பல்கலை உட்பட, அனைத்து பல்கலையிலும் தொடரும்' என, உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் குழப்பத்தை அதிகரித்து உள்ளது.



பணி நியமனம்

இதுபற்றி, பெயர் வெளியிட விரும்பாத பேராசிரியர்கள் கூறியதாவது: ஏற்கனவே, எம்.பில்., படித்து முடித்தவர்களுக்கு, உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட பணி வாய்ப்புகள் இல்லை. ஆராய்ச்சிக்கான உதவி தொகையும் கிடைப்பதில்லை. 'நெட், செட்' தேர்வில் தேர்ச்சி மற்றும் பிஎச்.டி., படிப்புகளின் அடிப்படையிலேயே, உதவி பேராசிரியர் பதவிகளுக்கு, பணி நியமனம் நடக்கிறது. தற்போதைய நிலையில், எம்.பில்., படிப்பில் சேர்வது, அதற்கு கட்டணம் செலுத்துவது என, அதற்கான காலமும், செலவும் எதிர்கால வேலை வாய்ப்புகளுக்கு உதவியாகஇருக்காது.

இந்த காலகட்டத்தில், பிஎச்.டி., படித்தாலாவது, அது பட்டதாரிகளின் வேலைவாய்ப்புக்குஉதவும். மேலும், யு.ஜி.சி.,யின் உத்தரவுகளை பின்பற்றினால் மட்டுமே, மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் பேராசிரியர்களுக்கான சம்பளம், ஆராய்ச்சி உதவித்தொகை உள்ளிட்டவைபல்கலைகளுக்கு கிடைக்கும். தமிழக பல்கலைகள், ஏற்கனவே நிதி நெருக்கடியில் உள்ளதால்,யு.ஜி.சி., உத்தரவை மீறி, எம்.பில்., படிப்பை நடத்தும் போது, யு.ஜி.சி.,யின் நிதியுதவி பாதிக்கும் அபாயம் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Post Top Ad