நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவதில் திட்டவட்டமாக உள்ளோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், புதுச்சேரியை போல் தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பது குறித்து ஆய்வு செய்து முதல்வருக்கு அறிக்கை தரப்படும்.முதல்வர் சொல்லும் வழிகாட்டுதல்படி பள்ளிகளைத் திறக்க முடிவு செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் குறித்து கணக்கெடுப்பு நடத்த உள்ளோம். கணக்கெடுப்பு அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும். மாணவர்கள் இடைநிற்றலை 17 சதவீதத்தில் இருந்து 5%ஆக குறைப்பதுதான் அரசின் நோக்கம். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவதில் திட்டவட்டமாக உள்ளோம். பள்ளிகள் திறப்பு குறித்து அதிகாரிகள் தெரிவிக்கும் கருத்துகள் முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும். கொரோனா சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் முதல்வர் அறிவுறுத்தல் படி பள்ளி திறப்பு பற்றி முடிவு எடுக்கப்படும். என்றார். முன்னதாக மாணவர்களின் கல்வித் திறனை கருத்தில்கொண்டு பள்ளிகளை விரைந்து திறக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளது.