அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் முன்னெப்போதையும் விட அதிகளவிலான மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். தனியார் பள்ளிகளில் தான் தரமான கல்வி கிடைக்கும் என்று பொது மக்களின் மனங்களில் கடந்த பல ஆண்டுகளாக இருந்த எண்ணம் மாறத் தொடங்கியிருக்கிறதோ என்ற கேள்வி எழுகிறது.
தமிழ்நாடு முழுவதும் இந்தாண்டு அரசுப் பள்ளிகளில் 2,04,379 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தனியார் பள்ளிகளிலிருந்து 75,725 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மட்டும் மாணவர் சேர்க்கை விவரங்களை கணக்கில் கொண்டால் சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்ட பின்னர் 2011ஆம் ஆண்டு மாணவர்களின் சேர்க்கை 1,00,320ஆக உயர்ந்தது. அதற்கு அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 88,000 முதல் 95,000 வரை என்ற நிலையில் இருந்து வந்தது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. 2021-22-ம் கல்வியாண்டில் மட்டும் 27,311 மாணவர்கள் புதிதாகச் சேர்ந்துள்ளனர். இதில் 19,000க்கும் அதிகமான மாணவர்கள் தனியார்ப் பள்ளியிலிருந்து வந்தவர்கள். நடப்பு கல்வியாண்டில் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கை 1,02,605 ஆக உள்ளது.
அரசுப் பள்ளிகளை நோக்கி பெற்றோர்களும், மாணவர்களும் படையெடுப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானதும் பெரும்பாலான பெற்றோர்கள் சொல்வதும் இதுதான். கொரோனா பொது முடக்கத்தால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் தங்களது அடிப்படை தேவைகளையே பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் உள்ளனர்.
இந்த சூழலில் தனியார் பள்ளிகளில் கட்டணம் கட்ட முடியாமல் பல மாணவர்கள் கல்வியைத் தொடர முடியாத சூழலில் உள்ளனர். 75 சதவீத கட்டணம் கட்டினால் போதும், மூன்று தவனைகளாக கட்டலாம் என்று அரசு அறிவித்துள்ள போதும் பல பள்ளிகள் முழு தொகையை கேட்டு நிர்பந்திப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இதனாலே பலர் அரசுப் பள்ளிகளை நோக்கி நகர்கின்றனர். ஆன்லைன் மூலம் ஒரு சில மணி நேரங்கள் பாடம் நடத்துவதற்கு ஏன் இவ்வளவு பணம் கட்ட வேண்டும். எனவே மாற்று சான்றிதழ் பெற்று அரசுப் பள்ளிகளில் சேர்கின்றனர். நிலைமை சீரான பின்னர் அடுத்த கல்வி ஆண்டில் பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவில் பல பெற்றோர்கள் உள்ளனர்.
ஏதோ ஒரு நிர்பந்தத்தில் அரசுப் பள்ளிகளை நோக்கி வந்துள்ள மாணவர்களை எவ்வாறு தக்கவைப்பது என்பது பள்ளிக் கல்வித்துறைக்கு உள்ள பெரிய சவால். அரசுப் பள்ளிகளில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, தனியார் பள்ளிகளை விட தரமான கல்வியை கொடுக்கும் போது இந்த மாணவர்களை தக்கவைப்பதோடு, மேலும் பல மாணவர்களை ஈர்க்க முடியும். இல்லையென்றால் மாணவர்கள் வந்த வேகத்தில் கொரோனாவுக்கு பின் மீண்டும் தனியார் பள்ளிகளை நோக்கி திரும்பிச் செல்லும் ஆபத்தும் உள்ளது.