இலுப்பூர் அருகே இராப்பூசல் பகுதியில் குக்கிராமங்களுக்கு நேரடியாக சென்று கல்வித்தொலைக்காட்சியின் கால அட்டவணையின் துண்டு பிரசுரங்களை மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும்,வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்டக்கல்வி அலுவலர் ப.சண்முகநாதன்
இலுப்பூர், ஜூலை.6: கல்வித்தொலைக்காட்சியின் கால அட்டவணையினை மாணவர்களின் பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் வழங்கி விழிப்புணர்வு செய்யவேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களிடம் வலியுறுத்தியிருந்தார். அதன்பேரில் புதுகோட்டை மாவட்டத்தில் கல்வித்துறை அலுவலர்களும், தலைமையாசிரியர்களும், ஆசிரியர்களும் மாணவர்களின் குடியிருப்புகளுக்கு நேரடியாகச் சென்று மாணவர்கள் கல்வித்தொலைக்காட்சியினை கால அட்டவணைப்படி பார்க்கிறார்களா? என பார்வையிட்டும்,கல்வித்தொலைக்காட்சி கால அட்டவணையினை மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும், வழங்கி தக்க ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.
அந்த முறையில் இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் ப.சண்முகநாதன் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுடன் இலுப்பூர் அருகே உள்ள இராப்பூசல் பகுதியில் உள்ள அம்பேத்கார் நகர், கலிங்கப்பட்டி ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று கல்வித்தொலைக்காட்சியின் கால அட்டவணையின் துண்டு பிரசுரங்களை மாணவர்களின் பெற்றோர்களிடமும், மாணவர்களிடமும் வழங்கி கல்வித்தொலைக்காட்சியின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறினார். மேலும் மாணவர்கள் கால அட்டவணைப்படி கல்வித்தொலைக்காட்சி பார்ப்பதை குடியிருப்புகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஊக்கமூட்டினார். பின்னர் கலிங்கப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு கல்வித்தொலைக்காட்சியின் கால அட்டவணையின் துண்டுபிரசுரங்களை வழங்கி அதன்படி கல்வித்தொலைக்காட்சியினை பார்க்க அறிவுரைகள் வழங்கினார். இந்த நிகழ்வில் பள்ளித்துணை ஆய்வாளர் த கி.வேலுச்சாமி, இரா ப்பூசல் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ரா.தனசேகரன்,உதவித்தலைமையாசிரியர் சி.முருகேசன், கலிங்கப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியை ஜெயா, இராப்பூசல் அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.