அரசு அச்சு தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின், ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, அரசு அச்சு தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின், முன்னாள் மாணவர் சங்கம் சார்பில், அதன் தலைவர் சந்தர் மற்றும் கவுரவ செயலர் அசோகன் வெளியிட்ட அறிக்கை: சென்னை, தரமணி தொழில்நுட்ப கல்வி வளாகத்தில், அரசு அச்சு தொழில்நுட்ப பயிலகம் இயங்குகிறது.இதில் ஒவ்வொரு ஆண்டும், 99 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு மொத்தம், 297 பேர் படிக்கின்றனர்.
படித்து முடித்ததும், வேலைவாய்ப்பை பெற்று தரும் நிறுவனமாக உள்ளது.இங்கு முதல்வர், துறை தலைவர், விரிவுரையாளர் என, 15 நிரந்தர ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. தற்போது, இதில் ஒரு இடத்தில் கூட, நிரந்தர ஆசிரியர் இல்லை. அந்த இடங்களில் தொகுப்பூதிய அடிப்படையில், அனுபவம் இல்லாத விரிவுரையாளர்களே பணியாற்றுகின்றனர்.
முதல்வர் பதவியையும், அச்சு தொழில் படிக்காத, வேறு நிறுவன முதல்வர்களே கூடுதல் பொறுப்பாக கவனிக்கின்றனர். எனவே, மாணவர்களின் நலன் கருதி, அச்சு தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின், ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியான ஆசிரியர்கள் கிடைக்காவிட்டால், தமிழக அரசின் அச்சகத்தில் பணியாற்றிய பணி மேலாளர் மற்றும் அதற்கு உயர்வான பதவிகளில் உள்ளவர்களை, மாற்று பணி அடிப்படையில், பணிபுரிய வைக்கலாம்.
ஏற்கனவே இந்த முறையில், அவர்கள் பணி புரிந்துள்ளனர்.மேலும், ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, அரசின் சார்பில் போட்டி தேர்வு நடத்தி, தகுதியானவர்களை பணி நியமனம் செய்யவும், உயர் கல்வி துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.