பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முக்கிய பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அரசு ஊழியர் ஒருவர் ஓய்வு பெற்ற பின்னர் அலவன்சோடு சேர்த்து அவர் இறுதியாக பெற்ற சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக மாதம் தோறும் வழங்கப்படும். இதனால் இறுதிக் காலங்களில் அவரது தேவைக்கு யாரையும் சார்ந்திருக்கும் நிலை ஏற்படாது. இந்த ஓய்வூதிய திட்டம் 1-4-2003க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு கிடையாது. அப்போது முதல்வராக இருந்த அதிமுக அரசு அதை ரத்து செய்தது.
பங்களிப்பு ஓய்வூதியம் - புதிய ஓய்வூதிய திட்டம்!
அதன் பின் பணிக்கு சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த முறைப்படி அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த தொகை அளவுக்கு அரசும் ஒரு தொகையை செலுத்தும். ஊழியர்கள் ஓய்வு பெறும்போது இந்த தொகை மொத்தமாக அவர்களுக்கு வழங்கப்படும். 2004 முதல் மத்திய அரசும் இந்த பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
புதிய திட்டத்தில் என்ன பிரச்சினை?
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வுபெறும் ஊழியருக்கு மொத்தமாக வழங்கப்படும் தொகை அவருக்கு பயனுள்ளதாக இருக்குமா என்பது கேள்விக் குறியே. மொத்தமாக கிடைக்கும் பணத்தை அவருக்கு நெருக்கானவர்கள் பெற்றுக் கொள்ளக்கூடும். சில காலங்களில் அவை காலியாகும் போது ஓய்வு பெற்றவர்கள் தங்களது இறுதிக் காலத்தை அன்றாட வாழ்க்கையை மேற்கொள்வதில் சிரமங்கள் ஏற்படும். அதுவே மாதம் மாதம் ஒரு தொகை கிடைத்தால் அவர்கள் யாரையும் சார்ந்திருக்காமல் தங்கள் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
தமிழ்நாடு அரசு நடவடிக்கை!
திமுக தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் ஆய்வறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், போக்குவரத்துக்கழக நிர்வாகிகளின் முன்மொழிவை அனுப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்து கழகங்களில் 01.04.2003 க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கும் 1998 ஓய்வூதியம் (அனைவருக்கும்) வழங்க ஓய்வூதிய டிரஸ்ட்டில் விபரங்கள் கோரப்பட்டுள்ளன. இதேபோல் மற்ற துறைகளிலும் விவரங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.