இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் பொறியியல் மேற்படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்களுக்கான GATE நுழைவுத் தேர்வு, 2 புதிய கூடுதல் படிப்புகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டு வரும் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
GATE தேர்வு:
பொறியியல் படிப்புகளுக்கு முதன்மையானதாக விளங்கும் IIT மற்றும் IISC போன்ற மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்ட மேற்படிப்புகளை பயில்வதற்கு ஒவ்வொரு ஆண்டும் GATE நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நுழைவுத்தேர்வானது நாடு முழுவதும் உள்ள 7, IIT கல்வி நிறுவனங்களால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அகில இந்திய அளவில் நடத்தப்படும் 2022 ஆம் ஆண்டுக்கான GATE நுழைவுத் தேர்வை IIT காரக்பூர் நடத்துகிறது.
மேலும் இத்தேர்வுகள் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என தற்பொழுது அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக IIT காரக்பூர் இயக்குநர் வி.கே.திவாரி கூறுகையில், ‘மத்திய கல்வி நிறுவனங்களில் சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், ஏரோ ஸ்பேஸ் உட்பட 27 பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை GATE நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
இதனுடன் புதிதாக புவிசார் பொறியியல் (GE) மற்றும் கடற்படை கட்டிடக்கலை மற்றும் கடல்சார் பொறியியல் (NM) உள்ளிட்ட 2 பாடங்களுக்கும் GATE நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்படுகிறது. இத்துறைகளில் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய நிபுணத்துவம் தேவைப்படுவதால் GATE தேர்வுகளை நடத்தவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த 2 பாடங்களை சேர்த்து மொத்தம் 29 பாடப்பிரிவுகளில் 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான நுழைவுத்தேர்வு பிப்ரவரி மாதம் 5, 6, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இத்தேர்வுகளில் பிடிஎஸ் மற்றும் எம்ஃபார்ம் பட்டப்படிப்பு முடித்தவர்களும் கலந்து கொள்ளலாம்’ என தெரிவித்துள்ளார்.