அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் நிறைவேறியது. முன்னதாக ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் கமிட்டியின் பரிந்துரையின் பேரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டநிலையில், இந்த மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. சட்டசபையில் உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது.
அப்போது தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதாவை சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
கடந்த பல ஆண்டுகளாக அரசுப்பள்ளி மாணவர்கள் விரும்பும் உயர்கல்வியை பெறுவது மிகவும் கடினமாக இருக்கிறது. உயர்கல்வியில் அனைத்து மாணவர்களுக்கும் சமவாய்ப்பு கிடைப்பதில்லை என்று கூறினார். தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்ட முன் வடிவை ஒரு மனதாக நாங்களும் ஆதரிக்கிறோம். பெரும்பாலும் ஏழை, எளிய, நடுத்தர குடும்ப மாணவர்கள் அரசுப் பள்ளியில் படிக்கின்றனர். அவர்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக கல்வி கற்க முடியாத சூழல் உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.