ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு நீக்கப்படுமா? - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, August 30, 2021

ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு நீக்கப்படுமா?



ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு கட்டுப்பாடு நீக்கப்படுமா என்று 45 வயது கடந்த பட்டதாரிகள் எதிர்பார்த்து காத்தி ருக்கின்றனர்.

தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு எழுதுவதற்கு, ஏற்கெனவே வயது வரம்பு கட்டுப்பாடு ஏதும் கிடையாது. உரிய கல்வித் தகுதி இருந்தால், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வை 57 வயதில்கூட எழுதலாம். இந்த நிலையில், கடந்த அதிமுக ஆட்சியின்போது, முதன்முதலாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. அதன்படி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான வயது வரம்பு, பொதுப் பிரிவினருக்கு 40 ஆக நிர்ணயிக்கப்பட்டது. எஸ்சி, எஸ்டி, பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி வகுப்பினருக்கும், பொதுப்பிரிவு உட்பட அனைத்து பிரிவுகளை சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்பட்டது.

ஆசிரியர் பணிக்கு வயது வரம்புகொண்டுவந்ததற்கு, பிஎட் முடித்தமுதுநிலை பட்டதாரிகள் கடும்எதிர்ப்பு தெரிவித்தனர். ஆசிரியர்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தன.ஆனாலும், வயது வரம்பு கட்டுப்பாட்டில் மாற்றம் செய்யப்படவில்லை.

இதைத் தொடர்ந்து, ஆசிரியர் தகுதி தேர்வுக்கும் வயது வரம்பு கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. அதன்படி, பொதுப் பிரிவினருக்கு 40 ஆகவும், இடஒதுக்கீடு பிரிவினருக்கு 45 ஆகவும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. ஏற்கெனவே, ஆசிரியர் தகுதி தேர்வுக்கு பொதுப் பிரிவினர் உட்பட அனைத்து வகுப்பினருக்கும் எந்த விதமான வயது வரம்பும் கிடையாது. மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு எழுதக்கூட வயது வரம்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில், அதிமுக ஆட்சியில் ஆசிரியர் பணிக்கு கொண்டுவரப்பட்ட வயது வரம்பு நீக்கப்படும்என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு திமுக பொறுப்புக்கு வந்துள்ளதால், ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு நீக்கப்படும் என்று, 45 வயது கடந்தபிஎட் பட்டதாரிகளும், இடைநிலைஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். இதுபற்றிய அறிவிப்புநடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையில் வெளியாகும் என்றும் எதிர்பார்த்தனர். ஆனால், அதில் எந்தஅறிவிப்பும் வெளியிடப்படாததால், ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக, வயது வரம்பு கட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரிகள் கூறியதாவது:

ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சிவாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது என்று கடந்த வாரம் அரசாணை வெளியிடப்பட்டது. ஏற்கெனவே தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் கணிசமானோர் 40 வயதை தாண்டியவர்கள். தற்போது வயது வரம்பு கட்டுப்பாடு இருப்பதால் டெட் தேர்ச்சி பெற்றும்,40, 45 வயது தாண்டியவர்களால் அரசு பள்ளிகளில் வேலைக்கு செல்ல முடியாது. தகுதி தேர்வுக்கும் அவர்கள் விண்ணப்பிக்க இயலாது.

விரைவில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு, ஆசிரியர் தகுதிதேர்வை நடத்த தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. எனவே, ஆசிரியர் பணியில் சேரவும், டெட் தேர்வு எழுதவும் விதிக்கப்பட்டுள்ள வயது வரம்பு கட்டுப்பாட்டை தமிழக அரசு நீக்க வேண்டும். இப்படி அறிவிப்பதால், அரசுக்கு எந்த நிதி இழப்பும் கிடையாது. 45 வயது கடந்தவர்களும் ஆசிரியர் பணியில் சேர முடியும். எனவே, திமுக தேர்தல் வாக்குறுதிப்படி, ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை நீக்குவது குறித்த அறிவிப்பை சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கிறோம்.

Post Top Ad