கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் தேர்வில் ஒரு பாடத்தில் மட்டும் தோல்வியுற்ற மாணவர்களுக்கு நேரடி தேர்வு எழுத பாரதியார் பல்கலைக்கழகம் வாய்ப்பு அளித்துள்ளது.
அரியர் தேர்வுகள்:
நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாக இருந்த காரணத்தால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. அதனை தொடர்ந்து ஆன்லைன் மூலம் பாடங்கள், தேர்வுகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் சில மாணவர்கள் தேர்ச்சி பெறாமல் தோல்வியுற்றனர். 2021ம் ஆண்டு பாரதியார் பல்கலைக்கழகம் ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்தியது. இதில் ஒரு பாடத்தில் மற்றும் தோல்வியடைந்தவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை ஆன்லைன் தேர்வு நடத்தப்படாது எனவும், நேரில் வந்து தேர்வு எழுத வேண்டும் என பல்கலை நிர்வாகம் கூறியுள்ளது. நேரில் நடத்தப்படும் தேர்வானது செப்., 26ம் தேதி காலை 10:00 மணி முதல் 1:00 மணி வரை நடக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் 2018-19ம் ஆண்டை சேர்ந்த, இளங்கலை மற்றும் எம்.சி.ஏ., மாணவர்களுக்கும், 2019-20ம் ஆண்டு சேர்ந்த, முதுகலை முது அறிவியல், முது வணிகவியல் மாணவர்களுக்கும் இந்த சலுகை வழங்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வரிடம் செப்.9ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது. இளங்கலை கலை, வணிகவியல் தேர்வுகள் ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில், இளம் அறிவியல், முதுகலை, முது அறிவியல் மற்றும் (எம்.பி.ஏ., எம்.சி.ஏ., உட்பட) தேர்வுகள் என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லூரியில், பாரதியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்திலும் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவதற்கான நுழைவுச்சீட்டை தேர்வு நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு www.b-u.ac.in என்ற இணையத்தை அணுகுமாறு நிர்வாகம் கூறியுள்ளது