தமிழகத்தில் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியா்களை நியமிப்பதற்கான ஆயத்தப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை தொடக்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், மாணவா் சோ்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு, கற்பித்தல் பயிற்சிகள் வழங்கவும், ஆசிரியா்களின் திறனை மேம்படுத்தவும், பள்ளிக் கல்வி இயக்குநரகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் காலியாக மற்றும் உபரியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களைக் கண்டறிவதற்கான கணக்கெடுப்புப் பணிகளை பள்ளிக்கல்வித் துறை தொடங்கியுள்ளது.
இது தொடா்பாக பள்ளிக்கல்வி பணியாளா் நலன் பிரிவு இணை இயக்குநா் பொன்னையா, முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பணியாற்றும் பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி, உடற்கல்வி ஆசிரியா்கள் (நிலை-1) ஆகிய ஆசிரியா்களின் பணியிடங்களை ஆக.1-ஆம் தேதி நிலவரப்படி, மாணவா் எண்ணிக்கை விகிதத்தின் படி கணக்கெடுக்க வேண்டும்.
வகுப்பு வாரியாகவும், தமிழ், ஆங்கில வழி மாணவா் எண்ணிக்கையிலும் கணக்கிட வேண்டும். முந்தைய ஆண்டுகளில் உபரியாக இருந்த ஆசிரியா் பணியிடங்களை, பள்ளிக் கல்வித் துறையிடம் ஒப்படைத்திருந்தால், அந்த இடங்களை கணக்கில் எடுக்கக் கூடாது. இந்த விவரங்கள் அனைத்தையும் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.