தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை எவ்வாறு வசூலிக்க வேண்டும்? பள்ளிக்கல்வி ஆணையர் சுற்றறிக்கை
பள்ளிக்கல்வி துறை ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:- தனியார் பள்ளிகள் நடப்பு கல்வியாண்டுக்கான கல்வி கட்டணமாக 85 சதவீத கட்டணத்தை 6 தவணைகளாக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ந் தேதிக்குள் பெற்றுக்கொள்ளலாம். தொற்று நோய் காலத்தில் வருமான இழப்பை சந்தித்த பெற்றோர் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அந்த பள்ளி நிர்வாகம் அவர்களுக்கு 75 சதவீத கல்வி கட்டணத்தை வசூலிக்க வேண்டும். அதையும் 6 தவணைகளில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ந் தேதிக்குள் வசூலிக்கலாம். இதுதவிர, கொரோனா ஊரடங்கு காரணமாக வணிகம் மூடப்பட்டது, வேலையின்மையினால் தவிக்கும் பெற்றோரின் மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். வகுப்புகளில் இருந்து நீக்கக்கூடாது
பள்ளி நிர்வாகம் எந்த ஒரு மாணவரையும் கல்வி கட்டணம் செலுத்தாதது, நிலுவைத்தொகையை கட்டாததற்காக ஆன்லைன் வகுப்புகள், உடற்கல்வி வகுப்புகளில் இருந்து அவர்களை நீக்கக்கூடாது. அதேபோல் தேர்வு முடிவுகளையும் நிறுத்தி வைத்து, பள்ளியைவிட்டு அவர்களை நிறுத்தக்கூடாது. இதுபோன்ற நடவடிக்கை கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டால், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். கட்டணத்தில் சலுகை தொடர்பாக பெற்றோர், பள்ளி நிர்வாகத்துக்கு இடையே ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், பள்ளி நிர்வாகத்தின் குறிப்பு மற்றும் மாணவர்களின் பெற்றோர் கொடுத்த விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரி பரிசீலித்து 30 நாட்களுக்குள் பொருத்தமான முடிவை எடுக்க வேண்டும். 2021-22-ம் கல்வியாண்டில் மாணவர்கள் எந்த சூழ்நிலையிலும் கல்வி நிறுவனங்களில் இருந்து நீக்கப்படமாட்டார்கள், வெளியேற்றப்படமாட்டார்கள். அதை சம்பந்தப்பட்ட அதிகாரமுள்ள கல்வித்துறை அதிகாரிகள் கண்காணிப்பார்கள். உரிய நடவடிக்கை
ஒரு குறிப்பிட்ட பள்ளியில் மாணவர்கள் படிப்பை தொடருவதற்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், அவர்களை அருகிலுள்ள அரசு மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து பள்ளிகளில் இடமளித்து தேவையான ஏற்பாடுகளை செய்ய கல்வித்துறை அதிகாரிகளை அணுகலாம். சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் நிர்வாகம் 2021-22-ம் கல்வியாண்டில் சேகரிக்கப்பட வேண்டிய கட்டண விவரங்களை அந்தந்த இணையதளத்தில் 4 வார காலத்துக்குள் வெளியிட வேண்டும். கட்டணம் நிர்ணயிப்பதில் சர்ச்சை ஏற்படும் பட்சத்தில், அதை சரிசெய்ய பள்ளி நிர்வாகம் அல்லது சம்பந்தப்பட்ட மாணவர்கள், பெற்றோர் கட்டண நிர்ணயக்குழுவை அணுகலாம். இவற்றில் ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால், அது கோர்ட்டு அவமதிப்பாக கருதப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.