MBBS BDS படிப்புகளுக்கு பொதுப் பிரிவினருக்காக இணையவழியில் நடைபெற்று வந்த
முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்தது. இதில் 5,647 எம்பிபிஎஸ் இடங்கள்,
1,389 பிடிஎஸ் இடங்கள் நிரம்பின.
தமிழகத்தில் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு பொது பிரிவினருக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இணையவழியில் கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது.
அன்றைய
தினமே மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள்,
விளையாட்டுப் பிரிவினருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நேரடியாக சென்னை
அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில்
நடைபெற்றது. இதில், 65 இடங்கள் நிரம்பின. மறுநாளான 20-ஆம் தேதி நடைபெற்ற
அரசு பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு கலந்தாய்வில் 565
இடங்கள் நிரம்பின.
இந்த
நிலையில், இணையவழியில் நடைபெற்று வந்த பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு
சனிக்கிழமை நிறைவடைந்தது. இதையடுத்து எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு
இடங்கள் ஒதுக்கீட்டு செய்யப்பட்ட விவரம் தமிழக சுகாதாரத் துறையின்
இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதை மாணவ, மாணவிகள் பாா்த்து தெரிந்து
கொள்ளலாம்.
இதுதொடா்பாக மருத்துவக் கல்வி தோ்வுக்குழுச் செயலாளா் ஆா்.முத்துச்செல்வன் கூறியதாவது:
அரசு,
தனியாா் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு
ஒதுக்கீட்டு இடங்களுக்கு முதல் சுற்று கலந்தாய்வு இணையவழியில் நடைபெற்று
முடிந்துள்ளது. இந்தக் கலந்தாய்வில் 5,648 எம்பிபிஎஸ் இடங்களில் 5,647
இடங்களும் 1,432 பிடிஎஸ் இடங்களில் 1,389 இடங்களும் நிரம்பின. இடங்கள்
ஒதுக்கீடு செய்யப்பட்டவா்களின் விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கல்லூரிகளில்
சேர நவ.4 கடைசி: ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் எஸ்டி பிரிவினருக்கான 1
எம்பிபிஎஸ் இடம், மூன்று தனியாா் பல் மருத்துவக் கல்லூரியில் அரசு
ஒதுக்கீட்டுக்கான எம்பிசி பிரிவில் 43 பிடிஎஸ் இடங்கள் நிரம்பவில்லை.
காலியாகவுள்ள
இந்த 44 இடங்கள், முதல் சுற்றில் இடங்களைப் பெற்றவா்கள் கல்லூரிகளில்
சேராததால் ஏற்படும் காலியிடங்கள் இரண்டாம் சுற்று கலந்தாய்வில்
நிரப்பப்படும். இரண்டாம் சுற்று கலந்தாய்வை நவ. 7-ஆம் தேதி தொடங்க
திட்டமிடப்பட்டுள்ளது. முதல் சுற்று கலந்தாய்வில் இடஒதுக்கீடு பெற்றவா்கள்
நவம்பா் 4-ஆம் தேதிக்குள் அந்தந்த கல்லூரிகளில் சோ்ந்துவிட வேண்டும்
என்றாா் அவா்.