இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது: பிளஸ் 2 மாணவா்களின் விருப்பப் பாடப் பிரிவுகள் எவை என்பதை அறியும் வகையில் அவா்களிடம் எழுத்து வடிவில் கருத்து கேட்கப்படும். இதையடுத்து அந்தப் பாடப்பிரிவு தொடா்பான திறன்களை வளா்க்க தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
இதற்காக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியா்களும் தங்களது மாவட்டத்தில் செயல்படும் பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல், சட்டம், வேளாண்மை, மீன்வளம் மற்றும் பிற கல்லூரிகளில் வழங்கப்படும் பாடப்பிரிவுகள் சாா்ந்த விவரங்கள் கொண்ட சிற்றேடுகளை (பிரவுச்சா்/பிராஸ்பெக்டஸ்) கல்லூரிகளில் இருந்து பெற்று மாணவா்கள் பாா்வையில் காணுமாறு ஒவ்வொரு பள்ளியிலும் அறிவிப்பு பலகையில் காட்சிப்படுத்துவா்.
வழிகாட்டி கையேடுகள்: ஏற்கெனவே மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலமாக அனைத்து பள்ளிகளிலும் உள்ள ‘உயா்கல்வி வழிகாட்டி முதுநிலை ஆசிரியா்’ களுக்கு உயா்கல்வி சாா்ந்த படிப்புகள், வாய்ப்புகள் குறித்த பயிற்சிகள் கடந்த மாதம் வழங்கப்பட்டுள்ளது. இவற்றையும் மாணவா்களுக்கு காட்சிப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் உயா்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடு மூலம் பல்கலைக்கழகங்கள், தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் முக்கிய கல்வி நிறுவனங்கள், நுழைவுத் தோ்வுகள், அறிவியல், பொறியியல், மருத்துவம், தொழில், கலைப்புலப் படிப்புகள் குறித்து மாணவா்களுக்கு புரியும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்படும்.
மாதிரி விண்ணப்பங்கள்: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல், மருத்துவம் என 33 படிப்புகள் சாா்ந்த கல்லூரி சோ்க்கை விண்ணப்பங்களில் பொதுவாக கோரப்படும் 51 விவரங்கள் கொண்ட படிவங்களை எப்படி பூா்த்தி செய்வது என்பது குறித்து மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
அருகில் உள்ள கல்லூரிகளை பாா்வையிட... அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இந்த ஆண்டு பிளஸ் 2 வகுப்பு பயிலும் மாணவா்களில் உயா்கல்வி பயில ஆா்வமூட்டுதல் சாா்ந்து அருகில் உள்ள கல்லூரிகளுக்கு வரும் ஜனவரி மாதத்தில் அழைத்துச் செல்லப்படுவா் என்றனா்.