கோவை மாநகராட்சிப் பள்ளிகளில், பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் ஆரம்பப்பள்ளிகள், இடைநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 84 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் 24,771 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 1,417 ஆசிரியர்கள், 92 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
மாநகராட்சி கல்வித் துறையின் சார்பில், மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பொதுத்தேர்வுகளில் சிறப்பாக செயல்படும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: 2021-22-ம் கல்வியாண்டில் மாநகராட்சி பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி மாணவர்களின் தேர்ச்சி 87.77 சதவீதமாகவும், பிளஸ் 1 மாணவர்களின் தேர்ச்சி 87.57 சதவீதமாகவும், பிளஸ் 2 மாணவர்களின் தேர்ச்சி 92.17 சதவீதமாகவும் உள்ளது.
இந்நிலையில், மாநகராட்சிப் பள்ளிகளில் பொதுத்தேர்வில் ஒரு பாடத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படுமென மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மாநகராட்சிப் பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீத மாணவர்களை தேர்ச்சி பெறச் செய்யும் வகுப்பு ஆசிரியர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊக்கத் தொகை அறிவிப்பு மாணவ, மாணவிகள் மேலும் சிறப்பாக படித்து தேர்ச்சி பெறவும், ஆசிரியர்கள் கற்பித்தல் முறையை தீவிரப் படுத்தவும் உந்து கோலாக இருக்கும், என்றனர்.