பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத, வரும் கல்வியாண்டு முதல், 75 சதவீத வருகைப் பதிவு கட்டாயம்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் கூறினார்.
பள்ளிக்கல்வித் துறை நடத்திய வினாடி - வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான, 'மெய்யறிவு கொண்டாட்டம்' என்ற நிகழ்ச்சி, சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் நேற்று துவங்கியது.
பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலர் காகர்லா உஷா முன்னிலை வகித்தார். அமைச்சர் மகேஷ் வாழ்த்துரை வழங்கினார்.
பள்ளிக் கல்வி துறை கமிஷனர் நந்தகுமார் வரவேற்புரை ஆற்றினார். தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி நன்றி கூறினார். சமக்ர சிக் ஷா கூடுதல் இயக்குனர் ராமேஸ்வர முருகன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.
வினாடி - வினா போட்டியில், மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட, 152 மாணவர்கள், வரும், 8ம் தேதி வரை சென்னையில் உள்ள பல்வேறு இடங்களைச் சுற்றி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பின், அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி:
மாநில அளவில் வினாடி - வினா போட்டியில் தேர்வு பெற்ற, 152 மாணவர்களில், 25 பேர் தேர்வு செய்யப்பட்டு, வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு அறிவியல், தொழில்நுட்பத்தின் ஆர்வத்தை அதிகரிக்க, இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ள மாணவர்களின் சுய விபரங்கள் வெளியே 'லீக்' ஆனதா என்பது குறித்து, விசாரணை நடந்து வருகிறது. தவறு நடந்திருந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்துள்ள நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' நுழைவு தேர்வுக்காக, ஒரு மாதம் பயிற்சி வழங்கப்படும்.
அரசு பள்ளிகளில் எல்லா நாட்களிலும், மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
இதற்காக குறிப்பிட்ட கால நிர்ணயம் எதுவும் கிடையாது. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, திட்டமிட்ட தேதியில், ஆண்டு இறுதித் தேர்வு நடத்தப்படும். ஏதாவது சூழ்நிலை ஏற்பட்டால், தேர்வு தேதி மாற்றம் குறித்து அறிவிக்கப்படும்.
பிளஸ் 2 மே, 5ம் தேதி; பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1க்கு, மே 7ம் தேதி, தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டுஉள்ளது.
கொரோனா காலத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் என்பதால், இந்த ஆண்டு வருகைப் பதிவுக்கான கட்டுப்பாடு இன்றி, அனைத்து மாணவர்களும் பொதுத்தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். வரும் கல்வி ஆண்டு முதல், 75 சதவீத வருகைப் பதிவு கட்டாயம்.
இவ்வாறு அவர் கூறினார்.