தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 8,500-க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு பள்ளிக்கல்வித் துறை சார்பில் கடந்த 4 ஆண்டுகளாக அனுமதி வழங்கப்படவில்லை. இதுகுறித்த வழக்கு விசாரணையில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புதல், பணிநிரவல் செய்தல் ஆகியவற்றுக்கு பள்ளிக்கல்வித் துறை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் விவரம்; தற்போதைய பணியாளர் நியமனத்தின்படி பணியிடம் உபரி எனில் கூட்டு மேலாண்மை பள்ளியாக இருப்பின் அந்த பள்ளிகளுக்குள் பணிநிரவல் செய்ய வேண்டும்.
அதுவே ஒற்றை மேலாண்மை பள்ளியாக இருந்தால், நியமன ஒப்புதல் வழங்கி அரசுப் பள்ளிக்கு மாற்றுப் பணி மூலம் நிரவல் செய்யலாம். தலைமை ஆசிரியர் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் தவிர, இதர பணியிடங்களுக்கு நியமன ஒப்புதல் வழங்குவது சார்ந்த வழிமுறைகள் தனியேவழங்கப்படும். இந்த வழிமுறைகளை பின்பற்றி எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் ஒப்புதல் வழங்க வேண்டும்.