இந்திய வம்சாவளி பிரிட்டிஷ் சிறுவன் கிரிஷ் அரோரா, 10 வயதில், அறிவியல்
மேதைகளான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் நுண்ணறிவு திறனை (ஐ.க்யூ) விட அதிகம் பெற்று
அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
அறிவியல் மேதைகளாக கருதப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாவ்கிங் ஆகியோரின் நுண்ணறிவு திறன் (ஐ.க்யூ) அளவீட்டு எண் 160 ஆக இருக்கும். இதனை மிஞ்சும் விதமாக பிரிட்டன் நாட்டின் மேற்கு லண்டனில் உள்ள ஹவுன்ஸ்லோவைச் சேர்ந்த 10 வயதே ஆன இந்திய வம்சாவளி பிரிட்டிஷ் சிறுவன் கிரிஷ் அரோராவின், ஐ.க்யூ., அளவீட்டு எண் 162 ஆக அளவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகில் தலைசிறந்த அறிவாளிகளில் ஒருவராக இடம்பிடித்துள்ளார்.
இவ்வளவு ஐ.க்யூ அளவீட்டை பெற்றதால் கிரிஷை அறிவாளிகள் மட்டுமே படிக்கும் மென்சா பள்ளியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் பிரிட்டனில் மிகவும் உயர்ந்த பள்ளியாகக் கருதப்படும் ராணி எலிசபெத் பள்ளியிலும் சேர்ந்துள்ளார். இது தொடர்பாக கிரிஷ் அரோரா கூறுகையில், ஐ.க்யூ தேர்வுகளில் நடத்தப்பட்ட 11க்கும் மேற்பட்ட தேர்வுகள் எளிதாக இருந்தன. புதிய பள்ளியில் சேர்ந்து படிக்க ஆர்வமாக இருக்கிறது. அங்கு எனக்கேற்ற பாடங்கள் இருக்கும் என நம்புகிறேன்.
எனக்கு ஆரம்பப் பள்ளி சலிப்பாக இருக்கிறது. அங்கு நாள் முழுக்க எளிமையான கணக்கு அல்லது சும்மா ஒரு பத்தி (பாரா) மட்டும் எழுதச் சொல்கிறார்கள். அது போர் அடிக்கிறது. எனக்கு அல்ஜீப்ராவில் தான் அதிக விருப்பம். புதிய பள்ளியில் அதைச் செய்ய முடியும் என நம்புகிறேன் என்றார்.
இசையிலும் கில்லி
கிரிஷ் அரோரா, படிப்பு மட்டுமல்லாமல் இசையிலும் அலாதி பிரியமாக இருந்துள்ளார். வெறும் 6 மாதங்களில் நான்கு கிரேடுகளை முடித்து, டிரினிட்டி இசைக் கல்லூரியின் ஹால் ஆப் பேம்ல் இடம் பிடித்துள்ளார். தற்போது பியானோவில் 7 கிரேடுகளை முடித்துள்ளார்.