ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பெருமூச்சி அரசு நடுநிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''நான் இங்கு சர்ப்ரைஸ் விசிட்டாகவே வந்துள்ளேன். இங்கு படிக்கும் மாணவர்கள் வெட்கம், கூச்சம், பயம் ஏதுமின்றி நம்பிக்கையுடன் படிக்கின்றனர். முதல்வர் ஸ்டாலின் கலை பண்பாட்டு துறையை கொண்டு வந்துள்ளார். இதன் மூலம் மாணவர்கள் படிப்பில் மட்டுமின்றி, பாட்டிலும் கெட்டிக்காரர்களாக உள்ளனர் . இந்தியாவில் எத்தனையோ மாநிலங்களில் ஆசிரியர்கள் இருந்தாலும், தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர்களை யாராலும் அடித்துக் கொள்ள முடியாது, அவர்கள் மாணவர்களுக்கு நன்றாக பாடம் நடத்துகின்றனர்'' என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், சட்டமன்ற வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு கல்வித்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ. 44 ஆயிரத்து 42 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்து வருகிறது. ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே 98.8% மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் புதிய வகுப்பறை கட்டிடங்கள், ஆய்வகங்கள், புதிய ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். 2026 ஆம் ஆண்டுக்குள், 19 ஆயிரம் ஆசிரியர்களை உள்ளே கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்றார்.
அதைத்தொடர்ந்து வட்டாட்சியர், பள்ளி தலைமை ஆசிரியை , மாணவ மாணவிகள் மற்றும் ஆய்வகங்கள், வகுப்பறைகள் ஆகியவற்றை பள்ளி கல்வித்துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக, நேற்று (நவ.8), சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிகல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். அந்த கூட்டத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஏற்கனவே நிரப்புவதற்கு அனுமதிக்கப்பட்டு, சான்றிதழ் சாரிபார்ப்பு முடிந்துள்ள 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் மேலும், 128 தொழிற்கல்வி ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட உள்ளனர் என்றும் முடிவானது எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.