2000 - 2002 ஆம் ஆண்டில் ஆசிரியர் பட்டயப் பயிற்சி பயின்ற இடத்தில் மீண்டும் சங்கமித்த சாதனைப்பறவைகளின் சங்கமம் நிகழ்வு...
அருப்புக்கோட்டை,டிச.31:விருதுநகர்
மாவட்டம் ,பாலையம்பட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி
நிறுவனத்தில் 2000- 2002 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் மீண்டும் சந்திக்கும்
விழா டிசம்பர் 30 திங்கட்கிழமை அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு பாலையம்பட்டி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பா.செல்வி தலைமை தாங்கினார்.
முன்னாள்
முதல்வர்கள் எஸ்.இராஜாராம் ( பொறுப்பு),இராமநாதபுரம் மாவட்டம் ,மஞ்சூர்
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் வெள்ளத்துரை
ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
விழாவில்
சிறப்பு
விருந்தினர்களாக முன்னாள் விரிவுரையாளர்களான சந்திரசேகர்,நடராஜன்,கைலாச
வேணி,விஜயதேனு,சுந்தரமீனாட்சி,முத்துலட்சுமி,வெங்கடசாமி,கமலக்கண்ணன்,கருப்பசாமி
, இந்நாள் விரிவுரையாளர்கள்
அழகப்பன்,சடாச்சரவேல்,சௌந்தர்ராஜன்,ராணி,புவனேஸ்வரி,மகாலிங்கம்,விஜய்,முனியாண்டி
ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
பட்டதாரி தமிழ் ஆசிரியர் சோலையப்பன் விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் யதார்த்தமான முறையில் வரவேற்றுப் பேசினார்.
முன்னாள் மாணவ ஆசிரியர்கள் ஏகராஜா அவர்கள் ஏற்புரை வழங்கினார்.
முன்னதாக
இம்மண்ணுலகை விட்டு மறைந்த விரிவுரையாளர்கள்
கஜாமொகைதீன்,சங்கரலிங்கம்,மாணவ ஆசிரியர்களான இராஜா,மதிவாணர்,முருகன்
ஆகியோரை நினைத்து கண்கலங்கிய நிகழ்வும் அரங்கேறியது.
சிறப்பு
விருந்தினர்களின் சிறப்புரையும், முன்னாள் மாணவர்கள் மற்றும் இந்நாள்
ஆசிரியர்களின் நெகிழ்வான அனுபவ பரிமாற்றங்களும் நடந்தேறின.
விழாவில்
பாலையம்பட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில்
கல்வியாளராக பணிபுரிந்து தற்போது இராமநாதபுரம் மாவட்டம் மஞ்சூர் மாவட்ட
ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வராக சென்றுள்ள முனைவர்
கு.வெள்ளத்துரை அவர்களுக்கு முன்னாள் விரிவுரையாளர்கள் பொன்னாடை அணிவித்து
சிறப்பித்தனர்.அதே போல்
சிறப்பு விருந்தினர்களான கலந்து கொண்ட முன்னாள் விரிவுரையாளர்களுக்கும் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
மாவட்ட
ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்திற்கு 2000-2002 முன்னாள் ஆசிரிய
மாணவர்கள் சார்பாக பெரிய சுவர்க் கடிகாரம் ஒன்றினையும்,கவிஞர் ஓவியர் என
பன்முகத்நிறன் கொண்ட ஆசிரியர் கனகராஜ் சார்பாக தன் கையால் வரைந்த மறைந்த
முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரின் புகைப்படம் ஒன்றினையும் நினைவுப்
பரிசாக வழங்கினார்கள்.
இவ்வினிய
விழாவிற்கு அனுமதி வழங்கிய முதல்வர் பா.செல்வி அவர்களுக்கும் விழா
ஒருங்கிணைப்பாளர்களுக்கும் சுந்தரமகாலிங்கம் நன்றி கூற விழா இனிதே நிறைவு
பெற்றது.
தொடக்க நிகழ்வாக முன்னாள் மாணவர்கள்
ஆசிரியர் பயிற்சி நிறுவன வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் பொங்கல் வைத்து
பூஜைகள் செய்து வழிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.நிறுவனத்தின் நுழைவு
வாசலில் ஆசிரியர் கனகராஜ் அவர்கள் சந்திப்பிற்காக வாட்ஸ் அப் குழுவில்
ஓவியத்திற்குள் எழுதி அனுப்பிய கவிதைகள் அனைத்தும் ஒன்றாக தொகுப்பட்டு
பேனராக வைக்கப்பட்டிருந்ததும் காண்போரை மனம் மகிழச் செய்தது.
விழாவிற்கான
ஏற்பாடுகளை அன்னக்குமார்,சோலையப்பன்,ஆனந்த்குமார்,முனியசாமி,
நவநீதன்,சுந்தரமகாலிங்கம்,மாரிமுத்து,நரமேஷ்,சுரோஷ்பாண்
டி,கௌசல்யாதேவி,மாரியம்மாள்,மகேஷ்,ஆனந்தி,காளீஸ்வரி மற்றும் முன்னாள் மாணவ
ஆசிரியர்கள் அனைவரும் செய்திருந்தனர்.
இது குறித்து 2000-2002 ஆம் ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவ ஆசிரியர்கள் கூறியதாவது:
கடந்த
சில வருடங்களாக முயற்சித்தும் முடியாமல் தள்ளி தள்ளி சென்ற நிகழ்வு
எங்களது நண்பர்கள்,தோழிகள் பொங்கியெழுந்த ஆக்ரோசத்தின் விளைவாக நடந்தேறியது
என்பதே உண்மை.
முன்னாள்
மாணவர்களுக்காக ஆசிரியர் கோவிந்தராஜ் அவர்களால் உருவாக்கப்பட்ட் எங்களது
வாட்ஸ் அப் குழுவில் பிறந்தநாள் வாழ்த்துகள் பகிர்ந்த பொழுது " எது தேவையோ
அத பற்றி பேசுங்கப்பா... அதவிட்டுவிட்டு பிறந்தநாள் வாழ்த்து தான் இப்ப
ரொம்ப முக்கியமா?" என்ற ஆவேச பதிவின் எதிர்வினையே இந்த சந்திப்பு என்பதை
நினைக்கும் பொழுது மெய்சிலிர்ப்பதை எங்களால் தவிர்க்க இயலவில்லை.
இடைநிலை
ஆசிரியர் பயிற்சி பெற்றிருந்த போதிலும் இன்று பலரும் இடைநிலை
ஆசிரியர்களாகவும் பட்டதாரி ஆசிரியராகவும், வட்டார வளமைய ஆசிரிய
பயிற்றுநர்களாகவும்,தலைமை ஆசிரியர்களாகவும் பணியாற்றி வருகின்றோம். மேலும்
இந்நிகழ்வில்
2000 - 2002 ஆசிரியர் பட்டயப் பயிற்சி பயின்றவர்கள்
2000 - 2002 ஆசிரியர் பட்டயப் பயிற்சி பயின்றவர்களின்
குடும்ப உறுப்பினர்களும் எவ்வித பாசாங்குமின்றி அனைவரிடமும் கலந்துரையாடிய நிகழ்வு சிறப்பம்சமாக இருந்தது.
பல்வேறு
சூழல் காரணமாக நாங்கள் அதிகம் எதிர்பார்த்த எங்களது தமிழ்த்துறை
கல்வியாளர் சங்கீதா மேடம் மற்றும் எங்களது நண்பர்கள் சிலர் வர இயலாமல்
போனது மட்டுமே எங்களுக்கு வருத்தமாக இருந்தது. அதே போல் எங்களோடு பயின்ற
அனைவரையும் கண்டவுடன் மனதில் பூத்த பூரிப்பை சொல்லில் வடிப்பது கடினமே...
எவ்வித பாசாங்குமின்றி அதே உரிமையுடன் அளவளாவிய அண்ணன்மார்கள், அக்காக்களின் அன்பை கூற எங்களிடம் வார்த்தைகளே இல்லை.
சிறிது நேரமே இருந்தாலும் உள்ளத்தில் கரை புரண்டு ஓடிய உற்சாகத்திற்கு அளவே இல்லை.
சின்னஞ்சிறு தருணங்களைக் கூட அசை போட்டு மகிழ்ந்தோம்.
அனைவரின் குடும்பத்தாருக்கும் மிக்க நன்றி. அவர்களின் ஒத்துழைப்பு இல்லாவிடில் இந்நிகழ்வு சாத்தியமாகி இருக்காது என்பதே உண்மை.
காலம்
பலவற்றைக் கற்று தந்தாலும் சிலவற்றை மறக்க வைத்தாலும் பள்ளிப் பருவக்
காலமும் கல்லூரிக் காலமும் பசுமரத்தாணியாகவே பிரகாசிக்கும் என்பது எவ்வளவு
உண்மையென்பது இன்று இந்த சந்திப்பின் மூலம் நிரூபணமாகியது.
22ஆண்டுகளுக்கு முன் பிரிவு உபச்சார விழாவில் நடந்த நிகழ்வே இன்று எங்கள் கண் முன் ஊஞ்சலாடுகிறது.
முன்னாள் மாணவர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்ட நிகழ்வு வீட்டு விஷேசம் போல் காட்சியளித்தது.
வரும்
காலங்களில் அனைவரும் (விரிவுரையாளர்களும் மாணவ ஆசிரியர்களும்) சந்திக்கும்
நாளாக அமையும் என்ற நம்பிக்கையில் பிரிந்திருக்கிறோம்...
"முடிவில்லா பயணத்தில் இன்றைய நாள் காற்புள்ளி மட்டுமே!" என்றனர்.