அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 2.5 சதவீத உள்ஒதுக்கீடு என்னாச்சு? - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, December 7, 2024

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 2.5 சதவீத உள்ஒதுக்கீடு என்னாச்சு?

Tamil_News_lrg_3799370

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, உயர் கல்வியில் வாய்ப்பு அளிக்கும் வகையில் 2.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும்' என்ற தி.மு.க., தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படாததை கண்டித்து சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத அரசு உதவி பெறும் பள்ளிகளின் உரிமை மீட்புக் குழுவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் நேற்று, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தின் முன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பின், மீட்பு குழு மாநில செயலர் கனகராஜ் கூறியதாவது:

தமிழகத்தில் அரசு உதவி பெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத பள்ளிகளின் உரிமைகள் படிப்படியாக பறிக்கப்பட்டு வருகின்றன.

இதனால் மாணவர் சேர்க்கை, ஆசிரியர் பணியிடங்களில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறோம். இவற்றை ஆட்சிக்கு வந்ததும் தீர்ப்பதாக கூறிய தி.மு.க., தற்போது, எங்களை கண்டு கொள்ளவில்லை.


முக்கியமாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை 10 சதவீதமாக்கி, அதன் உள்ஒதுக்கீடாக 2.5 சதவீதத்தை, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதாக அறிவித்தது. ஆட்சியில் அமர்ந்ததும், தி.மு.க., மறந்து விட்டது.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி இணை பிரிவை அனுமதித்து, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதற்கான ஒப்புதல் வழங்கப்படாததால், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் சம்பளம் பெறாமல் பணியாற்றுகின்றனர்.

தமிழகத்தில், 1991 - 92ம் கல்வியாண்டுக்கு பின் துவக்கப்பட்ட, தரம் உயர்த்தப்பட்ட தமிழ்வழி பள்ளிகளுக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதி, 2011ல் அரசு மானியம் அளித்து அரசாணை வெளியிட்டார்; அது, கிடப்பில் போடப்பட்டுள்ளது.

உதவி பெறும் பள்ளிகளுக்கான அங்கீகாரம் புதுப்பித்தலை கைவிட்டு, நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட எங்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Post Top Ad