அமெரிக்க பல்கலைகளில் படிக்க விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா, நடப்பாண்டில் 38 சதவீதம் குறைந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள பல்கலைகளில் படிப்பதற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு, எப் - 1 என்ற விசா வழங்கப்படுகிறது. வழக்கமாக இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்களே இந்த விசாவை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், 2024 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் வழங்கப்பட்டுள்ள விசா குறித்த தகவல்களை, அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, நடப்பாண்டில், 64,008 விசாக்கள் மட்டும் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவல்
கடந்தாண்டில் இதே காலகட்டத்தில், 1,03,495 விசாக்கள் வழங்கப்பட்டன. இதன்படி, நடப்பாண்டில், 38 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2020ல் கொரோனா பரவல் தீவிரமாக இருந்தபோது, 6,646 இந்திய மாணவர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்பட்டது. அதே நேரத்தில், 2021ல் 65,235 மற்றும் 2022ல் 93,181 விசாக்கள் வழங்கப்பட்டன. அவற்றுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு குறைந்த அளவே வழங்கப்பட்டுள்ளது.
அதிகளவு மாணவர்களை அனுப்பும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ள சீனாவைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாவும், எட்டு சதவீதம் குறைந்துள்ளது. கடந்தாண்டு, 80,603 விசாக்கள் வழங்கப்பட்ட நிலையில் இந்தாண்டு, 73,781 மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவை விட சீன மாணவர்களுக்கு இந்தாண்டில் அதிக எண்ணிக்கையில் விசா கிடைத்துள்ளது.
இந்தியா முன்னேற்றம்
அதே நேரத்தில் அமெரிக்காவில் படிக்கும் மொத்த மாணவர்கள் எண்ணிக்கையில், சீனாவை இந்தியா முந்தியுள்ளது. கடந்தாண்டில், 2,68,923 என்ற அளவில் இருந்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, 3,31,000 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் சீன மாணவர்களின் எண்ணிக்கை, 2,89,526ல் இருந்து, 2,77,398 ஆக குறைந்துள்ளது.