சித்த மருந்துகள் செய்முறைக்கு கூடுதலாக 72 புத்தகங்கள் மத்திய ஆயுஷ் செயலர் உறுதி - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, December 22, 2024

சித்த மருந்துகள் செய்முறைக்கு கூடுதலாக 72 புத்தகங்கள் மத்திய ஆயுஷ் செயலர் உறுதி


சித்த மருந்து செய்முறைகளுக்கு கூடுதலாக, 72 புத்தகங்கள் இணைக்கப்படுவதன் வாயிலாக, புதிய மருந்துகள் தயாரிக்கப்படும் என மத்திய ஆயுஷ் அமைச்சக செயலர் வைத்திய ராஜேஷ் கோட்டெச்சா தெரிவித்தார்.

மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம், தேசிய சித்த மருத்துவ நிறுவனம், தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆகியவற்றின் சார்பில், எட்டாவது தேசிய சித்த மருத்துவ தினம், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.

இதில், மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ், வீடியோ கான்பரன்ஸ் வழியாக பேசுகையில், மத்திய அரசு, இந்திய மருத்துவ முறைகளுக்காக தனி அமைச்சகத்தை உருவாக்கி உள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில், மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, சித்த மருத்துவ முறைகள் மிகுந்த பயன் அளித்தன. தேசிய ஆயுஷ் இயக்கத்தை, தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது, என்றார்.

தமிழக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இணை இயக்குனர் பார்த்திபன் பேசுகையில், சித்த மருந்துகளின் செய்முறைகளுக்கு, 27 புத்தகங்கள் மட்டுமே உள்ளன. அவற்றில் சித்தர்கள் கொடுத்துள்ள வழிமுறைகளின்படி, கூடுதலாக 72 மருந்து செய்முறை புத்தகங்களை இணைத்தால், பல நோய்களுக்கு புதிய மருந்துகள் தயாரிக்க முடியும்.

மேலும், சித்த மருந்துகளுக்கு, ஆயுஷ் துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அனுமதி அளிக்கிறது. அந்த மருந்துகளுக்கு, ஒரே மாதிரியான அனுமதி என்ற முறையில், தேசிய மருத்துவ சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும், என்றார்.

நிகழ்ச்சியில், மத்திய ஆயுஷ் அமைச்சக செயலர் வைத்திய ராஜேஷ் கோட்டெச்சா பேசியதாவது:

சித்தா மருத்துவ கல்வி, ஆராய்ச்சி ஆகியவற்றில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. நாட்டில், 900க்கும் மேற்பட்ட ஆயுஷ் புத்தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. பிரதமர் மோடி தலைமையில் இத்துறை சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது.

கிராமப் பகுதிகளில் 90 சதவீத மக்கள், நகர்ப்புறங்களில் 95 சதவீத மக்கள், ஆயுஷ் மருத்துவத்தை நன்கு அறிந்துள்ளனர். இவர்களில் 50 சதவீதம் பேர், ஆயுஷ் மருத்துவ முறையை பயன்படுத்துகின்றனர். ஆயுஷ் மருத்துவ முறைகளின் பயன்களை பெற, 22 செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.

சித்த மருந்து செய்முறையில் கூடுதலாக, 72 புத்தகங்கள் இணைக்கப்படும். அதன் வாயிலாக, புதிய மருந்து தயாரிப்புகளும் உருவாகும். சித்த மருந்துகளை, மத்திய மருத்துவ சட்டத்தின் கீழ் கொண்டு வருவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Post Top Ad