நீட் தேர்வில், 87 மதிப்பெண் பெற்றிருந்தால், சித்தா, யுனானி, ஆயுர்வேதா, ஹோமியோபதி படிப்புகளில் சேரலாம். அதேபோல, பிளஸ் 2 வகுப்பில், 35 மதிப்பெண் பெற்றிருப்பவர்களுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவம் படிக்கும் வகையில், மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு உள்ளன.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், சித்தா, யுனானி, ஆயுர்வேதா, ஹோமியோபதி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, நீட் நுழைவுத்தேர்வு அடிப்படையில் நடக்கிறது.
அதில், அரசு ஒதுக்கீட்டில், 115 இடங்கள்; நிர்வாக ஒதுக்கீட்டில், 112 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்பும் வகையில், நீட் தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவினருக்கு, 112 மதிப்பெண்களும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு, 87 மதிப்பெண்களும் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.
எனவே, விருப்பமுள்ள மாணவர்கள் நேரடியாக, சென்னை அரும்பாக்கம், சித்தா மருத்துவமனை வளாகத்தில் உள்ள தேர்வுக் குழுவில் விண்ணப்பித்து, வரும் 10ம் தேதிக்குள் சேரலாம்.
அதேபோல, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளில், அரசு ஒதுக்கீட்டில் 269 இடங்கள்; நிர்வாக ஒதுக்கீட்டில் 166 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான சேர்க்கைக்கும் தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கான நேரடி மாணவர் சேர்க்கை, அரசு ஒதுக்கீட்டுக்கு, வரும் 11ம் தேதி வரையும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 12ம் தேதி வரையும் நடத்தப்படும் என, இந்திய மருத்துவ முறை மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது.