அரசு பள்ளிகளில் AI பணியிடங்களை கணினி அறிவியல் பட்டதாரிகளை கொண்டு நிரப்ப கோரிக்கை - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, December 11, 2024

அரசு பள்ளிகளில் AI பணியிடங்களை கணினி அறிவியல் பட்டதாரிகளை கொண்டு நிரப்ப கோரிக்கை

 அரசுப் பள்ளிகளில் உள்ள Administrator Cum Instructor பணியிடங்களை கணினி அறிவியல் பட்டம் பெற்ற கல்வியியல் பட்டதாரிகளைக் கொண்டு நியமிக்க தி.மு.க. அரசை வலியுறுத்தல்!

சென்னை: அரசுப் பள்ளிகளில் உள்ள Administrator Cum Instructor பணியிடங்களை கணினி அறிவியல் பட்டம் பெற்ற கல்வியியல் பட்டதாரிகளைக் கொண்டு நியமிக்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசின் சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் உள்ள பதினான்காயிரத்திற்கும் மேற்பட்ட நடுநிலை, உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் Hi Tech Lab நிறுவும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிதியின் மூலம் கணினி அறிவியல் பாடத்திற்கென்று பாடத் திட்டத்தினை உருவாக்கி, கணினி பயிற்றுநர்களைக் கொண்டு கணினி பாடத்தை மாணவ, மாணவியருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

ஆசிரியர்கள் பணியிடை பயிற்சிகள் மேற்கொள்ள Hi Tech Lab-ஐ பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு சில விதிமுறைகளை வகுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், மேற்படி நிதியிலிருந்து மாணவ, மாணவியருக்கு கணினி அறிவியல் பாடத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டிய தி.மு.க. அரசு, அதைச் செய்யாமல் EMIS என்னும் அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, கணினி அறிவியல் பட்டம் படித்த கல்வியியல் பட்டதாரிகளை Administrator cum Instructor பணியிடங்களில் அமர்த்தி மாணவ, மாணவியருக்கு கணினிப் பாடத்தை கற்றுக் கொடுக்க வேண்டுமென்ற நிலையில், அதனைச் செய்யாமல், இந்தப் பணிகளில் தன்னார்வலர்களை நியமித்து, கணினி அறிவியல் மற்றும் கல்வியியல் படிப்பு முடித்து வேலைக்காக காத்திருக்கும் அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு துரோகம் செய்து வருவதோடு, மாணவர்களின் எதிர்காலத்தையும் தி.மு.க. அரசு குழிதோண்டி புதைத்து இருக்கிறது.

இது மட்டுமல்லால், மத்திய அரசிடம் கணக்குக் காட்ட ஏதுவாக, அரசு உயர் நிலைப் பள்ளிகளில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்துவரும் ஆய்வக உதவியாளர்கள் Hi Tech Lab-ல் பணிபுரியுமாறு கட்டாயப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. மாநிலத்தின் செலவைக் குறைக்க தி.மு.க. அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது கடும் கண்டனத்திற்குரியது.

மாநிலத்தின் செலவைவிட மிக முக்கியமானதாக விளங்குவது முறையான கல்வித் தகுதி பெற்ற கணினி ஆசிரியர்களை Hi Tech Lab-ல் நியமிப்பதும், மாணவ, மாணவியர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதுடும்தான் என்பதை தி.மு.க. அரசு புரிந்து கொண்டு, அரசுப் பள்ளிகளில் உள்ள Hi Tech Lab-ல் உள்ள Administrator cum Instructor பணியிடங்களை கணினி பட்டம் மற்றும் கல்வியியல் பட்டம் பெற்றவர்களை நியமித்து, மாணவர்களுக்கு தரமான கணினி அறிவியலை போதிக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

Post Top Ad